புதிய ஓலா S1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்க விரும்புவோர் ஓலா எலெக்ட்ரிக் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் முன்பண கட்டணத்தை செலுத்தி முன்பதிவு செய்து கொள்ள முடியும்.
ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் புதிய ஓலா S1 ப்ரோ மாடல் இந்திய எலெக்ட்ரிக் வாகன சந்தையில் முன்னணி மாடலாக உருவெடுத்து இருக்கிறது. ஏத்தர், பஜாஜ், டி.வி.எஸ். மற்றும் பல்வேறு நிறுவனங்களை பின்னுக்குத் தள்ளி ஓலா எலெக்ட்ரிக் இத்தகைய பெயரை பெற்று உள்ளது. ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அதீத பிரச்சினைகள் கூறப்பட்ட போதும், இத்தகைய நிலையை ஓலா எலெக்ட்ரிக் எட்டி இருக்கிறது.
ஓலா S1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை வாங்குவதற்கான முன்பதிவு தளம் தற்போது மீண்டும் திறக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி புதிய ஓலா S1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்க விரும்புவோர் ஓலா எலெக்ட்ரிக் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் முன்பண கட்டணத்தை செலுத்தி முன்பதிவு செய்து கொள்ள முடியும்.
விலை உயர்வு:
இதுதவிர, ஓலா S1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்க விரும்புவோர் இனி அதனை வாங்க ரூ. 10 ஆயிரம் கூடுதலாக பணம் செலுத்த வேண்டும். இந்திய சந்தையில் ஓலா S1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை ரூ. 10 ஆயிரம் அதிகரிக்கப்பட்டு உள்ளது. விலை உயர்வை அடுத்து ஓலா S1 ப்ரோ ஸ்கூட்டர் விலை தற்போது ரூ. 1 லட்சத்து 39 ஆயிரத்து 999 என மாறி இருக்கிறது. விலை உயர்வு பற்றிய தகவலை ஓலா எலெக்ட்ரிக் நிறுவன தலைமை செயல் அதிகாரி பாவிஷ் அகர்வால் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்து இருக்கிறார்.
அதன்படி ஓலா S1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அடுத்த விற்பனைக்கு வாங்குவோர் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும் என குறிப்பிட்டு இருக்கிறார். ஓலா S1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை ரூ. 1 லட்சத்து 39 ஆயிரத்து 999 என ஓலா எலெக்ட்ரிக் வலைதளத்திலும் மாற்றப்பட்டு விட்டது.
அம்சங்கள்:
அம்சங்களை பொருத்தவரை ஓலா S1 ப்ரோ மாடலில் 8.5 கிலோவாட் திறன் வெளிப்படுத்துகிறது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மணிக்கு 40 கிலோமீட்டர் வேகத்தை மூன்றே நொடிகளில் எட்டி விடும். இந்த ஸ்கூட்டர் மணிக்கு அதிகபட்சம் 115 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது. இதில் உள்ள 3.97 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் முழு சார்ஜ் செய்தால் 181 கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்கும் திறன் கொண்டது ஆகும்.