ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் இந்திய சந்தையில் S1 மற்றும் S1 ப்ரோ எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்து வருகிறது.
ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது புதிய எலெக்ட்ரிக் கார் டீசரை வெளியிட்டு உள்ளது. டீசரின் படி முதல் எலெக்ட்ரிக் கார் செடான் மாடலாக இருக்கும் என தெரியவந்துள்ளது. இந்த எலெக்ட்ரிக் கார் மெல்லிய டிசைன் மற்றும் ஹேச்பேக் போன்ற தோற்றம் கொண்டுள்ளது.
ஸ்போர்ட் டிசைன், டபுள் பேரல் ஹெட்லேம்ப்கள், அதன் இடையே எல்.இ.டி. ஸ்ட்ரிப், பின்புறம் எல்.இ.டி. ஸ்ட்ரிப் கொண்டிருக்கிறது. இந்த காரின் பொனெட்டில் இலுமினேட் செய்யப்பட்ட ஓலா லோகோ இடம்பெற்று உள்ளது. இத்துடன் ட்வின் யு வடிவ டி.ஆர்.எல்.கள், கிரில் பகுதியிலும் ஓலா லோகோ வழங்கப்படும் என தெரிகிறது. இதன் ஃபெண்டர்கள் பொனெட் லைன் மீது சற்றே வீங்கிய நிலையில் காட்சி அளிக்கிறது.
எலெக்ட்ரிக் கார் விவரங்கள்:
ஓலா எலெக்ட்ரிக் கார் விவரங்கள் ஆகஸ்ட் 15 ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. இந்த எலெக்ட்ரிக் கார் அடுத்த ஆண்டு வாக்கில் விற்பனைக்கு வரும் என தெரிகிறது. எலெக்ட்ரிக் கார் மாடல்களை உருவாக்க ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் புது ஆலையை உருவாக்க திட்டமிட்டு உள்ளது.
தற்போது ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் இந்திய சந்தையில் S1 மற்றும் S1 ப்ரோ எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்து வருகிறது. இரு ஸ்கூட்டர் மாடல்களும் ஓசூரில் உள்ள ஓலா பியூச்சர் பேக்டரியில் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. முன்னதாக ஓலா S1 ப்ரோ மாடலுக்கு மூவ் ஓ.எஸ். 2 சாப்ட்வேரை வெளியிட்டு வருகிறது. இந்த அப்டேட் கொண்டு பயனர்கள் தங்களின் ஓலா எலெக்ட்ரிக் கம்பேனியன் ஆப் மூலம் எலெக்ட்ரிக் வாகனங்களை இயக்கும் வசதி வழங்கப்படுகிறது.
இந்த அம்சம் கொண்டு ஸ்கூட்டரை லாக், அன்லாக், இ ஸ்கூட்டர் பூட் பகுதியை பட்டன் மூலம் இயக்க முடியும். மேலும் ஸ்கூட்டரின் மோட்கள், சார்ஜிங் ஸ்டேட்டஸ் மற்றும் ஓடோமீட்டர் ரீடிங் போன்ற அம்சங்களை இயக்கலாம்.