அதிரடியாய் உருவாகும் புது ஆலை... ஆண்டுக்கு 10 லட்சம் யூனிட்கள்.. மாஸ் காட்டும் ஒகினவா...!

By Kevin KaarkiFirst Published Jun 22, 2022, 5:37 PM IST
Highlights

ஆலையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் சுமார் பத்து லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர் ஒகினவா ஆட்டோடெக் ராஜஸ்தான் மாநிலத்தில் புது உற்பத்தி ஆலையை துவங்கி இருக்கிறது. இந்த உற்பத்தி ஆலை ராஜஸ்தான் மாநிலத்தின் கரோலி எனும் பகுதியில் அமைந்து இருக்கிறது. இந்த மாபெரும் உற்பத்தி ஆலையில், தலைசிறந்த வசதிகள் இடம்பெற்று இருக்கிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் ஓகினவா ஆட்டோடெக் நிறுவனத்தின் மூன்றாவது உற்பத்தி ஆலை இது ஆகும். 

புதிய உற்பத்தி ஆலை 30 ஏக்கர் பரப்பளவில் உருவாகி வருகிறது. இந்த ஆலையில் மொத்தம் 5 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்ற உள்ளனர். இந்தியாவில் இதுவரை உருவாக்கப்பட்ட உற்பத்தி ஆலைகளில் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்ட பெரிய எலெக்ட்ரிக் இரு சக்கர உற்பத்தி ஆலையாக இது இருக்கும் என ஒகினவா ஆட்டோடெக் நிறுவனம் தெரிவித்து உள்ளது. இந்த ஆலையை உருவாக்க ரூ. 500 கோடி முதலீடு செய்யப்படுகிறது. அக்டோபர் 2023 வாக்கில் இந்த உற்பத்தி ஆலை பயன்பாட்டுக்கு வர உள்ளது. இந்த ஆலையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் சுமார் பத்து லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

ரோபோடிக் பிரிவுகள்:

இந்த உற்பத்தி ஆலை முழுமையான தானியங்கி முறையில் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் எலெக்ட்ரிக் பவர்டிரெயின் உற்பத்தியும் தானியங்கி முறையில் நடைபெறும் என தெரிகிறது. இதில் ஆட்டோமேடிக் ரோபோட் பேட்டரி உற்பத்தி யூனிட், மோட்டார் மற்றும் கண்ட்ரோலர் பிரிவு, பிளாஸ்டிக் பாடி பாகங்கள் மோல்டிங் செய்ய தானியங்கி ரோபோட்கள், தலைசிறந்த பெயிண்டிங் உள்ளிட்டவை இடம்பெற இருக்கிறது. 

எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் தேவையை பூர்த்தி செய்வதில் புது உற்பத்தி ஆலை மிக முக்கிய பங்கு வகிக்கும். உள்நாட்டு உற்பத்தி மட்டும் இன்றி வாகனங்களை ஏற்றுமதி செய்வதற்கான களமாகவும் புது ஆலை அமையும் என ஒகினவா ஆட்டோடெக் நிறுவனம் தெரிவித்து உள்ளது. எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை ஏற்றுமதி செய்ய ஒகினவா நிறுவனம் டகிடாவுடன் கூட்டணி அமைக்கிறது.

“எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் பிரிவில் முன்னணி நிறுவனமாக, நாங்கள் இந்த துறையில் ஏற்படும் மிக முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காணுவதில் ஆர்வம் செலுத்தி வருகிறோம். ஆய்வு மற்றும் வளர்ச்சி பணிகளுக்கான பிரிவுகள் புதிய ஆலையில் திட்டமிடப்பட்டு, எதிர்கால தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் உருவாக்கப்பட உள்ளன. மெகா உற்பத்தி ஆலை வாகனங்கள் உற்பத்தி மட்டும் இன்றி, உதிரி பாகங்களை வினியோகம் செய்வதிலும் கவனம் செலுத்தும்,” என ஒகினவா ஆட்டோடெக் நிறுவனத்தின் நிறுவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஜெதேந்தர் ஷர்மா தெரிவித்தார். 

click me!