Toyota Glanza 2022 : இந்தியாவில் டொயோட்டா நிறுவனத்தின் புதிய கிளான்சா மாடலுக்கான முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது.
டொயோட்டா நிறுவனம் இந்திய சந்தையில் புதிய கிளான்சா மாடலை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. புதிய கிளாசா மாடல் இந்தியாவில் மார்ச் 15 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த நிலையில், புதிய டொயோட்டா கிளான்சா மாடலுக்கான முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது. புதிய கிளான்சா மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 11 ஆயிரம் ஆகும். முன்பதிவு ஆன்லைன் மற்றும் டொயோட்டா விற்பனை மையங்களில் மேற்கொள்ளலாம்.
அறிமுக நிகழ்வை தொடர்ந்து புதிய கிளான்சா மாடலின் வினியோகம் துவங்குகிறது. புதிய டொயோட்டா கிளான்சா மாடல் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய தலைமுறை மாருதி சுசுகி பலேனோ ஹேட்ச்பேக் மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. புதிய கிளான்சா மாடலின் முன்புறம் ரி-வொர்க் செய்யப்பட்ட முன்புற டிசைன் கொண்டிருக்கிறது. இது கிளான்சா மாடலை புதிய பலேனோ மாடலில் இருந்து வித்தியாசப்படுத்தி காண்பிக்கும்.
"குறைந்த விலையில் அட்வான்ஸ்டு மாடலை வாங்க காத்திருப்போருக்காக புதிய கிளான்சா உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதனை அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். டொயோட்டா கிளான்சா மீது கடந்த ஆண்டுகளில் வாடிக்கையாளர்கள் வைத்த நம்பிக்கைக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம். 2019 ஆண்டில் புதிய டொயோட்டா கிளான்சா அறிமுகம் செய்யப்பட்டது."
"இது இந்திய சந்தையில் டொயோட்டா பயணத்தின் மிகமுக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது. புதிய வாடிக்கையாளர்கள் மற்றும் பழைய டொயோட்டா வாடிக்கையாளர்கள் கிளான்சா மாடலை வாங்கினர். இதுவரை சுமார் 66 ஆயிரத்திற்கும் அதிகமானோர் புதிய கிளான்சா மாடலை வாங்கி இருக்கின்றனர். புதிய கிளான்சா மாடலை கொண்டு வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான அனுபவத்தை வழங்குவதில் தொடர்ந்து அதிக கவனம் செலுத்துவோம்," என டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனத்தின் விற்பனை மற்றும் விளம்பர பிரிவு துணை தலைவர் அடுல் சூட் தெரிவித்தார்.
புதிய கிளான்சா மாடல் மேனுவல் மற்றும் AMT கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கும் என்பதை டொயோட்டா ஏற்கனவே உறுதிப்படுத்தி இருந்தது. இந்த மாட லில் 1.2 லிட்டர் K சீரிஸ் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட இருக்கிறது. இந்த என்ஜின் 88 பி.ஹெச்.பி. திறன் வெளிப்படுத்துகிறது. இந்த மாடலில் ஹெட்-அப் டிஸ்ப்ளே, 360 டிகிரி கேமரா, பெரிய டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி உள்ளிட்டவை வழங்கப்பட இருக்கிறது.