2022 C Class இந்திய வெளியீடு - மாஸ் அப்டேட் கொடுத்த மெர்சிடிஸ் பென்ஸ்

By manimegalai aFirst Published Jan 18, 2022, 11:07 AM IST
Highlights

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் 2022 C Class மாடல் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். 
 

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் 2022 C Class மாடல் இந்தியாவில் மே மாதம் வெளியாகிறது. இதனை மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான மார்டின் ஸ்குவென்க் தெரிவித்தார். 

இந்தியாவில் இந்த ஆண்டு எதிர்பார்க்கப்படும் ஒட்டுமொத்த விற்பனையில் 5th Gen C Class மாடல் இருமடங்கு வளர்ச்சியை பதிவு செய்யும் என அவர் மேலும் தெரிவித்தார். இந்திய ஆடம்பர கார் மாடல்கள் சந்தையில் மெர்சிடிஸ் பென்ஸ் முதலிடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு மட்டும் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் 11,242 கார்களை விற்பனை செய்து இருந்தது. இதில் C Class மாடல்கள் மட்டும் குறிப்பிடத்தக்க பங்குகளை வகித்தின. இதேபோன்று விரைவில் அறிமுகமாக இருக்கும் C Class மாடலும் விற்பனையில் நல்ல வரவேற்பை பெறும்.  

"தற்போதைய C Class மாடல்கள் அமோகமாக விற்பனையாகி வருகின்றன. இவை விரைவில் விற்றுத்தீரும் நிலையில் உள்ளன. வாடிக்கையாளர்களுக்கு அதிகம் பிடித்த மாடலின் புது வேரியண்டை அறிமுகம் செய்ய அதிக நேரம் எடுத்துக்கொள்ள மாட்டோம். எனினும், கொரோனா தொற்று பரவல் காரணமாக வெளியீட்டு திட்டங்களில் மறுசீரமைப்பு செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம்," என மார்டின் ஸ்குவென்க் தெரிவித்தார். 

புதிய C Class மாடல் கடந்த ஆண்டு சர்வதேச சந்தையில் அறிமுகமானது. இந்த மாடலின் ஒட்டுமொத்த நீளம் மற்றும் வீல்பேஸ் முறையே 65mm மற்றும் 25mm அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த கார் கேபின் பெரிதாகி இருக்கிறது. ஷார்ப் ஸ்டைலிங் மற்றும் டேப்லெட் போன்று அளவில் பெரிய டச்-ஸ்கிரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், பல்வேறு புது தொழில்நுட்பங்கள் இந்த மாடலின் ஸ்பெஷல் அம்சங்கள் ஆகும். 

சர்வதேச சந்தையில் 2022 C Class மாடல் எலெக்டிரிஃபை செய்யப்பட்ட 4 சிலிண்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இந்த மாடல் எத்தகைய பவர்-டிரெயின் கொண்டிருக்கும் என்பது மர்மமாகவே உள்ளது. தற்போதைய மாடல்களில் 2 லிட்டர், 4 சிலிண்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றின் விலை ரூ. 50 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது.

ஏற்கனவே புதிய C Class மாடல் இந்தியாவில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்த மாடலின் ஸ்பை படங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. அந்த வகையில் மே மாதம் அறிமுகம் செய்யப்பட்டதும் விரைவில் இதன் விற்பனை மற்றும் வினியோகம் துவங்கும் என எதிர்பார்க்கலாம்.

click me!