செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) தொடர்பான ஆராய்ச்சிகள் தொடர்ந்து பாசிட்டிவ்வாக முன்னேறி வரும் நிலையில், 2021-ஆம் ஆண்டில் அதைப் பயன்படுத்தி நடைமுறையில் உதவும் சில தொழில்நுட்பங்கள் வரத்தொடங்கியுள்ளன.
2020-இல் தொடங்கிய கொரோனா வைரஸின் தாக்கம் 2021-ஆம் ஆண்டிலும் தொடர்ந்தது. சோதனையான காலகட்டத்திலும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்கள் குறிப்பிடத்தக்க மைல்கற்களைச் சந்தித்தன. அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்.
செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) தொடர்பான ஆராய்ச்சிகள் தொடர்ந்து பாசிட்டிவ்வாக முன்னேறி வரும் நிலையில், அது நடைமுறை வாழ்க்கையில் இன்னும் பயனுள்ளதாக மாறவில்லை. ஆனால், 2021-ஆம் ஆண்டில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி நடைமுறையில் உதவும் சில தொழில்நுட்பங்கள் வரத்தொடங்கியுள்ளன. GPT-Generative Pre-trained Transformer என்ற தொழில்நுட்பம் இதன் அடிப்படையிலானது. இத்தொழில்நுட்பமானது, மனிதர்களால் உருவாக்கப்பட்ட கோடிக்கணக்கான வார்த்தைகள், வாக்கியங்கள் ஒரு பெட்டகத்தில் சேகரித்து வைப்பதாகும். தேவைப்படும்போது அங்கிருந்து முழு கட்டுரையையோ, கதையையோ வெகு சுலபத்தில் எழுதிவிடலாம். அந்த அளவுக்கு இத்தொழில்நுட்பத்துக்கு வல்லமை உண்டு.
பேஸ்புக் நிறுவனம் தன்னுடைய பெயரை ‘மெட்டா’ என இந்த ஆண்டு அக்டோபரில் மாற்றிக்கொண்டது. பேஸ்புக் மட்டுமல்லாமல் வாட்ஸ் அப், இன்ஸ்டகிராம், ஆக்குலஸ் என பல தொழில்நுட்பங்களைத் தன் கையில் வைத்திருக்கும் ஃபேஸ்புக் நிறுவனம் இந்தப் பெயர் மாற்றத்தை செய்தது. விர்ச்சுவல் ரியாலிட்டியில் மனிதர்களால் இயக்கப்படும் வடிவமைப்புக்குதான் ‘மெட்டா’ என்று பெயர். அந்தப் பெயரை இந்நிறுவனம் தேர்ந்தது உலக அளவில் ஈர்த்தது.
காலங்காலமாக பேட்டரி என்றாலே, லித்தியம்-ஐயான் தொழில்நுட்பத்தில் உருவானவைதான். இதில் மாற்றத்தை ஏற்படுத்த நீண்ட நாட்களாகவே ஆராய்ச்சிகள் நடைபெற்று வந்தன. இந்த ஆண்டில் லித்தியம்-மெட்டல் எனப் பெயரிடப்பட்ட தொழில்நுட்பத்தில் உருவான பேட்டரி உருவாகியிருக்கிறது. லித்தியம் பேட்டரியைவிட இது பல மடங்கு அதிகமாக மின்சாரத்தைச் சேமித்து வைத்துக்கொள்ளும். அதெபோல மிகமிக குறைந்த நேரத்தில் ரீசார்ஜ் செய்துவிட முடியும்.
கொரோனா தடுப்பூசிகளை பல நாடுகளில் உள்ள மருந்து நிறுவனங்கள் கண்டுபிடித்து, அதை மக்களுக்குரியதாக மாற்றியிருக்கின்றன. மாத்திரை வடிவில் கொரோனா மருந்து எப்போது வரும் என்ற கேள்விக்கும் இந்த ஆண்டு விடை கிடைத்திருக்கிறது. ஃபைசர் நிறுவனம் தயாரித்துள்ள மாத்திரைக்கு அமெரிக்க மருத்து மற்றும் உணவுக் கட்டுப்பாட்டு நிறுவனம் அவசரக் கால அனுமதியை வழங்கியுள்ளது. மருத்துவ அறிவியல் உலகில் இந்த ஆண்டில் ஏற்பட்ட ஒரு முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது.
ஒரு வார்த்தையையோ வாக்கியத்தையோ படிக்கும்போது அவை நம் மூளையில் காட்சியாகிறது. அதையே ஓவியம் அல்லது இசை போன்ற கலை வடிவில் மாற்ற முடியுமா? இது அறிவியல் ஆராய்ச்சியாளர்களின் நீண்ட நாள் கனவு. ‘செயற்கைக் கலை’ என்றழைக்கப்படும் இவை, இந்த ஆண்டில் வரத் தொடங்கியுள்ளன. இதற்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் உதவுகின்றன. இதற்கான செயலியும் வந்துவிட்டது. Wombo Dream என்ற செயலியை ஆப்பிள், ஆண்ட்ராய்டு அலைபேசிகள் இரண்டிலும் பதிவிறக்கம் செய்யும் வடிவில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் சில வார்த்தைகளை வழங்கினால், அதற்கேற்ற ஓவியத்தை வரைந்து கொடுத்துவிடுகிறது.