2021 Top Virals : 2021-ஆம் ஆண்டில் இணையத்தைக் கலக்கிய வைரல்கள் என்ன..? ஒரு உற்சாக ரீவைண்ட்டிங்!

By Asianet TamilFirst Published Dec 30, 2021, 8:09 PM IST
Highlights

ஐரோப்பியக் கால்பந்து போட்டி தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பில், மேசையின் மீது இருந்த குளிர்பானத்தை ஓரமாக எடுத்து வைத்துவிட்டு, தண்ணீர் பாட்டிலைக் காட்டி ‘தண்ணீர் குடியுங்கள்’ ரொனால்டோ சொன்னது உலக அளவில் அதகளமானது.

2021-ஆம் ஆண்டு விடைபெற்று செல்ல இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில், 2021-ஆம் ஆண்டில் வைரலான சில அம்சங்களைப் பார்ப்போம்.

 

தமிழக யூடியூபர்கள் மத்தியில் பரிதாப வீடியோக்கள் மிகவும் பிரபலம். பரிதாப யூடியூபர்களை ஓவர் நைட்டில் ஓவர் டேக் செய்தான் கோவையைச் சேர்ந்த 5 வயது சிறுவனான ரித்விக். இந்திய மீடியாக்களைக் கலாய்த்து ‘ரிப்போர்ட்டர்ஸ் கலாட்டா’ என்ற பெயரில் ரித்விக் செய்த அலப்பறை, சிரித்து சிரித்து விலா எலும்புகளை நோக வைத்தன.  குறிப்பாக சரண்யா, தன்ராஜ், வேல்ராஜ் என மூன்று முகங்களில் செமயாக கலாட்டா செய்திருந்தான் சிறுவன் ரித்விக். இந்த ஒரு வீடியோ மூலம் ‘ரித்து ராக்ஸ்’ யூடியூப் சேனல் லைம் லைட்டுக்கு வந்தது.  யூடியூப்பைத் தாண்டி விளம்பரம், சினிமா என தற்போது ரித்விக் ஜமாய்த்துக்கொண்டிருக்கிறான்.

ஒரு படகு பயணம் இந்திய மனங்களைக் கொள்ளைக் கொண்டது. உலகில் இவ்வளவு அழகான நதியா என்று நம்மவர்கள் மூக்கு மீது விரல் வைத்தனர். தண்ணீரின் அடியில் கற்கள், மணல், பாசிகள் என அனைத்தும் தெளிவாகவும் அழகாகவும் இருந்த நதியின் புகைப்படம், பின்னர்தான் இந்தியாவில் உள்ள நதி என்பது தெரிய வந்தது. மத்திய ஜல்சக்தி துறை வெளியிட்ட இந்த நதி மேகாலயாவில் உள்ள ‘உம்ங்கோட்’.

சோசியல் மீடியா பெருகிவிட்ட இந்தக் காலத்தில் தினுசு தினுசாக பலரும் கிளம்பி வருகிறார்கள். அந்த வகையில் ஜார்வோ என்கிற பிரபல பிராங்க் ஸ்டார் இந்தியாவில் வெளிச்சத்துக்கு வந்தார். இந்திய - இங்கிலாந்து டெஸ்ட் தொடரின்போது அவ்வப்போது மைதானத்துக்குள் புகுந்து, மைதானத்தில் இருந்த ரசிகர்களை ஈர்த்தார். இவர் தொடர்பான செய்திகள், தகவல்கள் இந்தியாவில் தொடர்ந்து டிரெண்டிங்கில் இருந்தது. 

ஒரு செயல்; ஓஹோன்னு புகழ் என்பதைப் போல ஒரு செயலால் ஓஹோவென வைரலானார் போர்ச்சுக்கலைச் சேர்ந்த கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. ஐரோப்பியக் கால்பந்து போட்டி தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பில், மேசையின் மீது இருந்த குளிர்பானத்தை ஓரமாக எடுத்து வைத்துவிட்டு, தண்ணீர் பாட்டிலைக் காட்டி ‘தண்ணீர் குடியுங்கள்’ ரொனால்டோ சொன்னது உலக அளவில் அதகளமானது. சம்பந்தப்பட்ட குளிர்பான நிறுவனத்துக்கு பங்குச் சந்தையில் ஒரே நாளில் ரூ.29 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டது. 


சத்தீஸ்கரைச் சேர்ந்த சஹ்தேவ் டிர்டோ என்ற சிறுவன் இந்தியில் பிரபலமான ‘பச்பன் கா பியார்’ பாடலை பாடியது சோசியல் மீடியாவில் வைரலானது. இதனையடுத்து அப்பாடலின் முழு பதிப்பையும் சிறுவனை பாட வைத்து காட்சியாக்கப்பட்டது. ஆஸ்தா கில் மற்றும் ரிகோ ஆகியோருடன் சிறுவன் சஹ்தேவ் டிர்டோ பாடிய பாடல் இணையத்தை மீண்டும் தாறுமாறு வைரலானது. சத்தீஸ்கர் மாநிலமே இந்த பாடலைக் கொண்டாடி தீர்த்தது. யூடியூப்பில் மட்டுமே இப்பாடலை 33 கோடிக்கும் அதிகமானோர் பார்த்து ரசித்தனர்.

கவுதமாலாவில் பிப்ரவரியில் பகாயா எரிமலை சீறியது. எரிமலையைக் காண தினமும் கூட்டம் மொய்க்கத் தொடங்கியது. இதைத் தனது தொழிலுக்குப் பயன்படுத்திக் கொண்டார் பீட்சா தயாரிப்பாளரான டேவிட் கார்சியா. எரிமலை வழிந்தோடி அனலாக இருக்கும் கற்களில் பீட்சாவைச் சுடச்சுட சமைத்து கொடுத்தார் இந்த இளைஞர். சுவையாகத் தயாரான இந்த பீட்சாவுக்கு ‘பகாயா பீட்சா’ என்று திருநாமமும் சூட்டிவிட்டார். அவருடைய எரிமலை பீட்சா படம் வைரலாகி இணையத்தைக் கலக்கியது.

click me!