வணிகப் போட்டி வழக்கில் கூகுள் நிறுவனத்துக்கு ரூ.1,338 கோடி அபராதம் கட்டாயம்

By SG BalanFirst Published Mar 30, 2023, 2:44 PM IST
Highlights

வணிப்போட்டு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் கூகுள் நிறுவனம் 1338 கோடி ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்ற சிசிஐ உத்தரவை என்சிஎல்ஏடி (NCLAT) உறுதி செய்துள்ளது.

கூகுள் நிறுவனத்திற்கு 1,337 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட தீர்ப்பை தேசிய நிறுவனங்கள் சட்ட மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் (NCLAT) உறுதி செய்துள்ளது.

கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு மொபைல் போன்களில் கூகுள் குரோம், யூடியூப் போன்ற தனக்குச் சொந்தமான செயலிகளை முன்கூட்டியே நிறுவி வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்கிறது. இதனால், பிற போட்டியாளர்கள் பாதிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்ததால், 2022ஆம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி கூகுள் நிறுவனத்துக்கு ரூ.1337.76 கோடி அபாரதம் விதிக்கப்பட்டது.

Latest Videos

இந்தியப் போட்டிகளுக்கான ஆணையமான சிசிஐ என்ற அமைப்பு விதித்த இந்த அபராதத்தை எதிர்த்து கூகுள் நிறுவனம் தேசிய கம்பெனி சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்தது. இந்நிலையில், அப்போது சிசிஐ விதித்த அபராதத் தொகையில் 10 சதவீதத்தை மட்டும் கூகுள் நிறுவனம் செலுத்தவேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

இதையும் ஏற்காத கூகுள் நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. சென்ற ஜனவரி 19ஆம் தேதி இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் தேசிய கம்பெனி சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயமே மீண்டும் விசாரணை நடத்தி மார்ச் 31ஆம் தேதிக்குள் வழக்கை முடித்து வைக்குமாறு அறிவுறுத்தியது.

இந்நிலையில் நீதிபதி அசோக் பூஷன் மற்றும் உறுப்பினர் அலோக் ஸ்ரீவத்சவா ஆகியோர் அடங்கிய இருநபர் தீர்ப்பாய அமர்வு, முன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது அபராதத்தை ரத்து செய்யக் கோரியதை நிராகரித்ததுடன், 30 நாட்களுக்குள் அபராதத் தொகையை செலுத்தவும் உத்தரவிடப்பட்டது.

இதனையடுத்து, தீர்ப்பாயத்திற்கு நன்றி தெரிவித்துள்ள கூகுள் நிறுவனம் இந்த உத்தரவு பற்றி ஆய்வு செய்து, அடுத்தகட்ட சட்ட வாய்ப்புகள் குறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் தெரிவித்துள்ளது.

click me!