இந்தியாவில் மொபைல் டேட்டா கட்டண உயர்வு தான் பேஸ்புக் பயனர் வளர்ச்சி குறைய காரணம் என மெட்டா தெரிவித்துள்ளது.
இந்தியாவில் மொபைல் டேட்டா கட்டணங்கள் உயர்த்தப்பட்டதால் தான் டிசம்பர் 2021 மாதத்தில் மெட்டா பயனர் வளர்ச்சி குறைய காரணமாக மாறியது என அந்நிறுவனம் அறிவித்து இருக்கிறது. டெலிகாம் நிறுவனங்களான பாரதி ஏர்டெல், வோடபோன் ஐடியா மற்றும் ரிலையன்ஸ் ஜியோ உள்ளிட்டவை தங்களின் மொபைல் சேவை கட்டணங்களை 18 முதல் 25 சதவீதம் வரை உயர்த்தின. டிசம்பர் 2021 வரை நிறைவுற்ற காலாண்டில் மெட்டா நிறுவனத்தின் லாபம் 8 சதவீதம் சரிவடைந்தது.
"நான்காவது காலாண்டில் ஏற்பட்ட சில சம்பவங்கள் காரணமாகவே ஃபேஸ்புக் பயனர் வளர்ச்சி பாதிப்படைய தொடங்கியது. ஒருபக்கம் ஆசியா-பசிபிக் மற்றும் உலகின் இதர நாடுகளில் கொரோனா பெருந்தொற்று கோரத்தாண்டவம் காரணமாக பயனர் வளர்ச்சி குறைய துவங்கியது. மறுபுறம் இந்தியாவில் ஃபேஸ்புக் பயனர் வளர்ச்சி மொபைல் டேட்டா விலை உயர்வு காரணமாக குறைந்தது. இவற்றுடன் இளம் வாடிக்கையாளர்கள் மத்தியில் போட்டியாளர் சேவைகள் எங்களின் வளர்ச்சியை பாதிக்கின்றன," என மெட்டா நிறுவனத்தின் மூத்த நிதி அலுவலர் டேவ் வேனெர் தெரிவித்தார்.
undefined
இதன் மாதாந்திர பயனர்கள் எண்ணிக்கை வருடாந்திர அடிப்படையில் 4 சதவீதம் வளர்ச்சி பெற்று இருந்தாலும், தினசரி ஆக்டிவ் பயனர்கள் எண்ணிக்கை ஐந்து சதவீதமாக குறைந்துள்ளது. ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், மெசன்ஜர் மற்றும் வாட்ஸ்அப் போன்ற நிறுவன செயலிகளின் ஆக்டிவ் பயனர்கள் எண்ணிக்கை வருடாந்திர அடிப்படையில் 9 சதவீதம் அதிகரித்து இருக்கிறது.
2021 டிசம்பர் வரையிலான காலாண்டில் மெட்டொ நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருவாய் 20 சதவீதம் அதிகரித்து இந்திய மதிப்பில் ரூ. 2,51,600 கோடியாக இருக்கிறது. 2020 டிசம்பரில் இந்நிறுவனத்தின் வருவாய் இந்திய மதிப்பில் ரூ. 2,09,200 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.