Facebook - Meta நிறுவனத்தில் 11 ஆயிரம் ஊழியர்கள் பணிநீக்கம்! கடைசி சம்பளம் வழங்கப்படுமா?

By Dinesh TGFirst Published Dec 6, 2022, 5:55 PM IST
Highlights

Facebook மெட்டா நிறுவனத்தில் சமீபத்தில் கிட்டத்தட்ட 11 ஆயிரம் ஊழியர்கள் பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட நிலையில், அவர்களுக்கு விடுவிப்பு சம்பளம் வழங்கப்படவில்லை என்று தகவல்கள் வந்துள்ளன.

ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பணி நீக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அப்போது பணியாளர்களுக்கு 16 வாரங்களுக்கு நிகரான சம்பளம் வழங்கப்படும் என்று மெட்டா தரப்பில் கூறப்பட்டது. மேலும், ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்டுகள் மெட்டாவில் பணிபுரிந்தவர்களுக்கு, ஆண்டுக்கு இரு வாரம், என பணியாளர்களின் ஆண்டு அனுபவத்திற்கு ஏற்ப கூடுதல் சம்பளம் வழங்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது. 

ஆனால், மெட்டா நிறுவனத்தில் சில ஊழியர்களுக்கு அவ்வாறு எந்த சம்பளமும் வழங்கப்படவில்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. குறிப்பாக அந்த ஊழியர்கள் மெட்டாவின் சோர்சர் டெவலப்மென்ட் திட்டத்தின் உறுப்பினர்களாக இருந்தவர்கள். சோர்சர் டெவலப்மென்ட் திட்டம் என்பது, புதிதாக மெட்டா நிறுவனத்தில் சேருபவர்களுக்கு வழங்கப்படும் பயிற்சி திட்டமாகும். இங்கு தொழில்ரீதியாக பணியாளர்கள் தங்களை உயர்த்தி கொள்வது எப்படி என்பது குறித்த பல பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. 

இந்த திட்டத்தில் உறுப்பினர்களாக இருந்த 60க்கும் மேற்பட்டோர், சமீபத்தில் அரங்கேறிய பணிநீக்க நடவடிக்கையில் வேலையிழந்தனர். ஆனால், அவர்களுக்கு மெட்டா நிறுவனம் உறுதியளித்த சம்பளம் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், பணியாளர்களுக்கும் அவர்களது குடும்பத்திற்கும் வழங்கப்படும் ஆறு மாதத்திற்கான ஹெல்த் கேர் அசிஸ்டன்ஸ் வழங்கப்படுமா என்ற சந்தேகங்களும் எழுந்துள்ளன.

ShareChat நிறுவனத்தில் நூறுக்கும் மேற்பட்ட ஊழியர்கள்பணிநீக்கம்! கேமிங் தளத்தையும் இழுத்து மூடியது!

இதுகுறித்து சில ஊழியர்கள் CNBC செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்துள்ளனர். அதன்படி, மெட்டா நிறுவனம் 8 வாரத்திற்கான அடிப்படை சம்பளம் வழங்கியுள்ளதாகவும், மூன்று மாதத்திற்கான COBRA இன்சூரன்ஸ் வழங்கியுள்ளதாகவும் கூறுகின்றனர். இருப்பினும், முழு நேர பணியாளர்களாக இருந்த போதிலும், குறைந்த அளவிலான சம்பளத்தையே மெட்டா நிறுவனம் வழங்கியுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளனர். 

மேலும், இந்த பாதிப்புகள் தொடர்பாக மெட்டா நிறுவனத்தின் சிஇஓ மார்க் சக்கர்பெர்க் மற்றும் ஒருசில முக்கிய உயர்அதிகாரிகளுக்கு கடிதமும் எழுதப்பட்டுள்ளது.  அதில் "எங்கள் முன்னாள் மேலாளர்கள் கூட குழப்பத்தில் உள்ளனர். எங்களுக்கு 16 வார ஊதியம் மற்றும் 6 மாத சுகாதார காப்பீடு வழங்கப்பட்டிருக்க வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் மின்னஞ்சலுக்கு நிறுவனத்தின் தரப்பில் எந்தவித பதிலும் வரவில்லை என்றும் ஊழியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
 

click me!