ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனம் மெட்டா உலகின் அதிவேக சூப்பர்கம்ப்யூட்டரை உருவாக்கி இருப்பதாக அறிவித்து இருக்கிறது.
ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா "ஏ.ஐ. ரிசர்ச் சூப்பர்கிளஸ்டர்" எனும் பெயரில் உலகின் அதிவேக சூப்பர்கம்ப்யூட்டரை உருவாக்கி இருப்பதாக அறிவித்து உள்ளது. இது தற்போது உலகில் இருக்கும் சூப்பர்கம்ப்யூட்டர் மாடல்களை விட அதிவேகமானது என மெட்டா கருதுகிறது. "இந்த ஆண்டு மத்தியில் முழுமையாக உருவாக்கப்பட்டதும் இது உலகின் அதிவேகமான சூப்பர்கம்ப்யூட்டராக இருக்கும்," என மெட்டா அறிவித்துள்ளது.
இந்த சூப்பர்கம்ப்யூட்டர் மெட்டா நிறுவனத்தின் ஏ.ஐ. ஆய்வாளர்களை சிறப்பான ஏ.ஐ. மாடல்களை உருவாக்க வழி செய்யும் என மெட்டா தெரிவித்துள்ளது. இதற்கென சூப்பர்கம்ப்யூட்டர் பல கோடி உதாரணங்களை உலகம் முழுக்க நூற்றுக்கும் அதிக மொழிகளில் இருந்து வார்த்தைகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஒருங்கிணைக்கும். இத்துடன் இந்த சூப்பர்கம்ப்யூட்டர் புதிதாக ஆக்மெண்ட்டெட் ரியாலிட்டி டூல்களை உருவாக்கும் திறன் கொண்டிருக்கிறது.
இது மெட்டாவின் ஏ.ஐ. மாடல்களுக்கு புகைப்படம், சவுண்ட் மற்றும் செயல்களில் ஏதேனும் தீயவை இருக்கிறதா என்பதை மிகவேகமாக கண்டறிவதற்கான பயிற்சியை வழங்கும் திறன் கொண்டிருக்கிறது. இதன் மூலம் மெட்டா நிறுவனம் தற்போது வைத்திருக்கும் ஏ.ஐ. சிஸ்டம்களை மேலும் சக்தியூட்டிக் கொண்டு தீய தரவுகளை நொடிகளில் கண்டறிய முடியும்.
இவை அனைத்தையும் விட ஃபேஸ்புக் நிறுவனரின் கனவான மெட்டாவெர்ஸ் உருவாக்க இந்த சூப்பர்கம்ப்யூட்டர் பெருமளவு உதவி செய்யும். மிக முக்கிய கம்ப்யூட்டிங் பிளாட்ஃபார்மை உருவாக்க தேவையான தொழில்நுட்பங்களை உருவாக்க இந்த சூப்பர்கம்ப்யூட்டர் வழி செய்யும்.
மெட்டா ஏ.ஐ. ரிசர்ச் சூப்பர்கிளஸ்டரில் மொத்தம் 760 என்விடி.யா டி.ஜி.எக்ஸ். ஏ 100 சிஸ்டம்கள் மற்றும் அதன் கம்ப்யூட் நோட்கள், 6,080 ஜி.பி.யு.க்கள் உள்ளன. இதன் ஸ்டோரேஜில் 175 பெடாபைட்கள் பியூர் ஸ்டோரேஜ் ஃபிளாஷ்அரே, பெங்குயின் அல்டஸ் சிஸ்டம்களில் 46 பெடாபைட் கேச்சி ஸ்டோரேஜ், 10 பெடாபைட் பியூர் ஸ்டோரேஜ் ஃபிளாஷ்பிளேடு உள்ளது.