அமெரிக்காவில் அதிக சம்பளம் வாங்கும் பத்து தலைமை நிர்வாக அதிகாரிகளின் பட்டியலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரே சி.இ.ஓ. நிகேஷ் அரோரா தான்.
உலகின் தலைசிறந்த தொழில்நுட்ப நிறுவனங்களில் அதிக வருமானம் ஈட்டும் தலைமை நிர்வாக அதிகாரிகள் பட்டியல் வெளியாகியுள்ளது. C-Suite Comp வெளியிட்டுள்ள இந்த டாப் டென் பட்டியலில் ஒரே ஒரு இந்திய வம்சாவளி சி.இ.ஓ. மட்டுமே உள்ளார். இவர் மைக்ரோசாப்ட் சி.இ.ஓ. சத்யா நாதெல்லாவோ அல்லது கூகிளின் சி.இ.ஓ. சுந்தர் பிச்சையோ இல்லை.
பாலோ ஆல்டோ நெட்வொர்க்கின் தலைவரும் தலைமைச் செயல் அதிகாரியுமான நிகேஷ் அரோரா தான் அந்த டாப் 10 பட்டியலில் இடம்பிடித்துள்ளார். அமெரிக்காவில் அதிக சம்பளம் வாங்கும் பத்து தலைமை நிர்வாக அதிகாரிகளின் பட்டியலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரே சி.இ.ஓ. அவர்தான்.
undefined
சுவாரஸ்யமான அம்சம் என்னவென்றால் இந்தப் பட்டியலில் சுந்தர் பிச்சையோ சத்யா நாதெல்லாவோ இடம்பெறவே இல்லை. நிகேஷ் அரோராவின் பெற்றுள்ள CAP இழப்பீடு 2023 இல் 151.4 மில்லியன் டாலருக்கும் அதிகம் என ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அவர் பட்டியலில் 10வது இடத்தில் உள்ளார். ஆனால், உண்மையில் அவர் ஈட்டியது 266.4 மில்லியன் டாலருக்கும் அதிகமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
நிகேஷ் அரோரா டெல்லியின் ஏர்ஃபோர்ஸ் பப்ளிக் பள்ளியின் முன்னாள் மாணவர். கூகுளின் தலைமை வணிக அதிகாரியாகவும் பணியாற்றியவர். 2014 இல் கூகுள் நிறுவன வேலையை விட்டு வெளியேறிய பிறகு, ஜப்பானில் சாஃப்ட் பேங்கில் பணிபுரிந்தார். 2018 முதல் சைபர் செக்யூரிட்டி நிறுவனமான பாலோ ஆல்டோ (Palo Alto Networks) நெட்வொர்க்ஸில் சி.இ.ஓ.வாக பணியாற்றி வருகிறார்.
2023ல் 1.4 பில்லியன் டாலருக்கு மேல் சம்பாதித்த டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் இந்தப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். பலன்டிர் டெக்னாலஜிஸின் அலெக்சாண்டர் கார்ப் 1.1 பில்லியன் டாலருக்கு மேல் சம்பாதித்துள்ளார்.
தி வால் ஸ்ட்ரீட் ஜேர்னல் வெளியிட்டுள்ள 2023ஆம் ஆண்டு அமெரிக்காவில் அதிக ஊதியம் பெறும் CEO களின் பட்டியலில் நிகேஷ் அரோரா இரண்டாவது இடத்தைப் பிடித்தார். அதன்படி, நிகேஷ் ஈட்டிய மொத்த வருவாய் 151.43 மில்லியன் டாலர் என்று கூறப்படுகிறது.
அமெரிக்காவில் அதிக வருமானம் ஈட்டுபவர்களில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் அதிகமாக இருப்பதை இந்த அறிக்கை எடுத்துக்காட்டுகிறது. முதல் 500 இடங்களுக்குள் 17 பேர் வந்துள்ளனர். அடோபி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சாந்தனு நாராயண் 44.93 மில்லியன் டாலர்களுடன் 11வது இடத்தில் உள்ளார்.
எலான் மஸ்க் மற்றும் சுந்தர் பிச்சை இருவரும் 2023 இல் தங்கள் நிறுவனத்தில் இருந்து இழப்பீடுத் தொகையை எதுவும் பெறவில்லை. இருப்பினும் சுந்தர் பிச்சை 8.80 மில்லியன் டாலர் சம்பாதித்தார். பேஸ்புக் இணை நிறுவனர் மற்றும் மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க் 24.40 மில்லியன் டாலர்களை ஈட்டியுள்ளார்.