உஷாாார்… Netflix பெயரில் நூதன மோசடி.. ரூ. 1 லட்சத்தை இழந்ததாக போலீசில் புகார்!!

By Dinesh TGFirst Published Dec 2, 2022, 3:13 PM IST
Highlights

நெட்பிலிக்ஸ் பெயரில் வந்த இமெயிலை நம்பி, 1 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வங்கியில் இருந்து போன் பண்றோம், ஆதாரில் இருந்து போன் பண்றோம் என்று சொல்லி ஏடிஎம் கார்டு நம்பர் மூலம் பணத்தை மோசடி செய்த சம்பவங்களை கேள்விபட்டிருப்போம். ஆனால், நாளுக்கு நாள் ஆன்லைன் மோசடி கும்பல்கள், பல்வேறு வகைகளில் மோசடி யுக்திகளை கையாண்டு வருகின்றனர். அந்த வகையில், தற்போது மும்பையைச் சேர்ந்த ஒருவரிடம் நெட்பிலிக்ஸ் பெயரைச் சொல்லி 1 லட்சம் ரூபாய் திருடப்பட்டுள்ளது. 

மும்பையைச் சேர்ந்த 74 வயது முதியவருக்கு ஒரு மின்னஞ்சல் வந்துள்ளது. அதில், நெட்பிலிக்ஸ் சந்தா முடியப்போவதாகவும், மீண்டும் ரூ.499 செலுத்தி சந்தாவை புதுப்பித்துக் கொள்ளவும் என்று கூறி, கட்டணம் செலுத்துவதற்கான லிங்க் கொடுக்கப்பட்டிருந்தது. 

அதைப் பார்த்ததும் நெட்பிலிக்ஸ் என்று நம்பிய அந்த முதியவர், உடனே மின்னஞ்சலில் குறிப்பிட்டிருந்த லிங்க் கிளிக் செய்து, ஏடிஎம் கார்டு விவரங்களை எண்டர் செய்தார். உடனே அவருடைய மொபைலுக்கு ஓடிபி வரவே, அதையும் எண்டர் செய்தார். சிறிது நேரம் கழித்த பிறகு தான் அது மோசடி மின்னஞ்சல் என்றும், வங்கிக் கணக்கில் இருந்த 1.22 லட்சம் ரூபாய் பறிபோனதும் அவருக்கு தெரியவந்தது. பின்னர் சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. 

இதில் பரிதாபம் என்னவென்றால், வங்கியிலிருந்து அவருடைய மொபைலுக்கு வந்த ஓடிபியில், 1.22 லட்சத்திற்கான ஓடிபி என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அதை கவனிக்காமல், அந்த ஓடிபியை அப்படியே எண்டர் செய்ததால், மோசடி கும்பலுக்கு இது சாதகமாகி போய்விட்டது. 

Best Apps 2022: அட இதெல்லமா டாப் 10 ஆப்ஸ்.. கூகுளின் ரேங்க் பட்டியல் வெளியீடு!

சைபர் கிரைம் போலீசார் தரப்பில், ஆன்லைன் மோசடி குற்றவாளிகளை பிடிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், நாளுக்கு நாள் ஆன்லைன் மூலம் பணம் பறிக்கும் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 

பொதுமக்கள் முன்பின் தெரியாத இடத்தில் இருந்து மின்னஞ்சல் வந்தால், அதை ஒன்றுக்கு பல முறை ஆய்வு செய்ய வேண்டும். பெரிய பெரிய நிறுவனங்களின் பெயரில், நண்பர்களின் பெயரில் எல்லாம் மின்னஞ்சல், மெசேஜ்கள் வருவதாக புகார்கள் உள்ளன. எனவே, தெரிந்வர்களாகவே இருந்தால் கூட, அவர் தான் மின்னஞ்சல், மெசேஜ் அனுப்பியுள்ளாரா என்பதை உறுதிசெய்ய வேண்டும் என்று சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்துகின்றனர். 
 

click me!