Mahindra EV: மூன்று எலெக்ட்ரிக் கான்செப்ட் மாடல்களும் புதிய பிஸ்போக் எலெக்ட்ரிக் வாகன பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டு இருக்கின்றன.
மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் புதிய எலெக்ட்ரிக் வாகனங்களை உருவாக்கும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. 2023 துவக்கத்தில் மஹிந்திரா நிறுவனம் தனது XUV300 எலெக்ட்ரிக் வெர்ஷனை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு மாதங்களுக்கு முன் மஹிந்திரா நிறுவனம் ‘Born Electric Vision’ டீசரை வெளியிட்டது. இதில் மூன்று எலெக்ட்ரிக் கான்செப்ட் எஸ்.யு.வி. மாடல்கள் இடம்பெற்று இருந்தன.
இந்த ஆண்டு ஜூலை மாத வாக்கில் இவை காட்சிப்படுத்தப்பட இருக்கின்றன. மூன்று எலெக்ட்ரிக் கான்செப்ட் மாடல்களும் புதிய பிஸ்போக் எலெக்ட்ரிக் வாகன பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டு இருக்கின்றன. மஹிந்திரா நிறுவனம் தனது எலெக்ட்ரிக் வாகனங்களுக்காக ஸ்கேட்போர்டு அல்லது மோனோக் சார்ந்த எலெக்ட்ரிக் வாகனங்களை மட்டும் சார்ந்து இருக்கவில்லை.
எஸ்.யு.வி. முக்கியம்:
"காற்று மாசு அடிப்படையில், எஸ்.யு.வி. மாடல்கள் பற்றிய கவலை இருந்து வருகிறது. இவை எலெக்ட்ரிக் எஸ்.யு.வி.க்களுக்கான தளத்தை ஏற்படுத்தி இருக்கின்றன. ஏற்கனவே பல்வேறு எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மாடல்கள் கிடைக்கின்றன. இதே போன்று நாங்கள் அறிமுகம் செய்ய இருக்கும் மாடல்களும் எஸ்.யு.வி.-க்கள் தான். இதன் அடுத்தக் கட்டமாக பாடி-ஆன்-ஃபிரேம் எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. உருவாக்க திட்டமிட்டுள்ளோம்," என மஹிந்திரா குழும நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான அனிஷ் ஷா தெரிவித்தார்.
பாடி-ஆன்-ஃபிரேம்:
பாடி-ஆன்-ஃபிரேம் எலெக்ட்ரிக் வாகனம் எப்படி இருக்கும் என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. எனினும், இது பொலிரோ அல்லது ஸ்கார்பியோ மாடலின் எலெக்ட்ரிக் வேரியண்ட் ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது புதிய தலைமுறை ஸ்கார்பியோ மாடலை அறிமுகம் செய்யும் பணிகளில் மஹிந்திரா நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இந்த காரின் புது பிளாட்ஃபார்ம் கொண்ட எலெக்ட்ரிக் வாகனத்தை எளிதில் உருவாக்க முடியும் என தெரிகிறது.
இதே போன்று எலெக்ட்ரிக் பொலிரோ மாடலும் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது சிறிய டவுன்கள் மற்றும் ஊரக சந்தைகளில் குறிவைத்து அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.
போட்டி நிறுவனங்கள்:
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது மோனோக் ரக வாகனங்களை மட்டுமே எலெக்ட்ரிக் வடிவில் அறிமுகம் செய்து வருகிறது. டொயோட்டா நிறுவனம் சமீபத்தில் தனது இன்னோவா மாடலின் எலெக்ட்ரிக் வேரியண்டை இந்தோனேசியா சர்வதேச மோட்டார் விழாவில் அறிமுகம் செய்தது.