Kia EV6 Electric Bookings Begin In India இந்திய முன்பதிவு மட்டும் இன்றி கியா EV6 வேரியண்ட்கள் பற்றிய தகவல்களையும் கியா இந்தியா வெளியிட்டு உள்ளது.
கியா இந்தியா நிறுவனம் இந்திய சந்தையில் தனது முதல் எலெக்ட்ரிக் கார் கியா EV6 மாடலுக்கான முன்பதிவை துவங்கியது. புதிய கியா EV6 மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 3 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. முன்பதிவு நாட்டின் 12 நகரங்களில் உள்ள 15 விற்பனை மையங்களில் நடைபெற்று வருகிறது. முன்பதிவு மட்டும் இன்றி கியா EV6 வேரியண்ட்கள் பற்றிய தகவல்களையும் கியா இந்தியா வெளியிட்டு உள்ளது.
அதன்படி இந்திய சந்தையில் புதிய கியா EV6 மாடல் டாப் எண்ட் GT லைன் வேரியண்டில் மட்டுமே கிடைக்கும். இந்த மாடல் RWD மற்றும் AWD ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 528 கிலோமீட்டர் வரை செல்லும் ரேன்ஜ் கொண்டு இருக்கிறது.
இரண்டு டிரைவ் ஆப்ஷன்கள்:
இந்திய சந்தையில் புதிய கியா EV6 மாடலில் 77.4 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்படுகிறது. இந்த மாடல் ரியர் வீல் டிரைவ் (RWD) ஒற்றை மோட்டார் மற்றும் ஆல் வீல் டிரைவ் (AWD) டூயல் மோட்டார் என இரண்டு ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவை முறையே 229 ஹெச்.பி. திறன், 350 நியூட்டன் மீட்டர் டார்க் மற்றும் 325 ஹெச்.பி. பவர், 605 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது.
சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்படுவதை போன்றே இந்தியாவிலும் கியா EV6 மாடல் இருவதி சார்ஜிங் ஆப்ஷன்கள்- 50 கிலோவாட் மற்றும் 350 கிலோவாட் சார்ஜர்களுடன் கிடைக்கும். இதன் 50 கிலோவாட் சார்ஜர் 10 முதல் 70 சதவீதம் வரை சார்ஜ் ஆக 73 நிமிடங்களை எடுத்துக் கொள்ளும். 350 கிலோவாட் சார்ஜர் 10 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 18 நிமிடங்களை எடுத்துக் கொள்கிறது.
விற்பனை விவரங்கள்:
கியா EV6 மாடலுக்கான முன்பதிவு துவங்கி இருக்கும் நிலையில், இந்தியாவில் இந்த ஆண்டிற்கு வெறும் 100 யூனிட்களே விற்பனை செய்யப்பட இருக்கின்றன. முழுமையாக இந்திய சந்தையில் இறக்குமதி செய்யப்பட இருப்பதால், கியா EV6 விலை ரூ. 60 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 70 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம். இந்திய சந்தையில் புதிய கியா EV6 மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் வால்வோ XC40 ரிசார்ஜ் மற்றும் ஐயோனிக் 5 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும்.