கியா நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த கேரன்ஸ் எம்.பி.வி. மாடல் இந்திய சந்தையில் அமோக வரவேற்பை பெற்று இருக்கிறது.
கியா இந்தியா நிறுவனத்தின் கேரன்ஸ் எம்.பி.வி. மாடல் இந்திய சந்தையில் கடந்த மாதம் 15 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. எனினும், புது கேரன்ஸ் மாடலுக்கான முன்பதிவு ஜனவரி 14 ஆம் தேதியை துவங்கப்பட்டது. முன்பதிவு துவங்கி இரண்டு மாதங்கள் ஆகி விட்ட நிலையில், புதிய கேரன்ஸ் மாடலை வாங்க சுமார் 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளனர்.
சர்வதேச சந்தையில் நிலவும் செமிகண்டக்டர் குறைபாடு போன்ற கடினமான சூழலிலும் கியா நிறுவனம் 5 ஆயிரத்து 300 யூயனிட்களை கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் வினியோகம் செய்து இருக்கிறது. 50 ஆயிரம் முன்பதிவுகளில் கிட்டத்தட்ட 60 சதவீதம் வாடிக்கையாளர்கள் ஒன்று மற்றும் இரண்டாம் நிலை நகரங்களை சேர்ந்தவர்கள் ஆவர்.
"இத்தகைய வரவேற்பு எம்.பி.வி. பிரிவில் இதுவரை இல்லாத சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது. எங்களின் மற்ற எஸ்.யு.வி. மாடல்களுக்கு கிடைக்கும் வரவேற்பு இந்த மாடலுக்கும் கிடைத்து வருகிறது. இது உத்வேகம் அளிக்கிறது. இந்திய ஆட்டோமொபைல் சந்தை கடினமான சூழலில் சிக்கித் தவிக்கிறது. செமிகண்டக்டர் குறைபாடு நம் சந்தையில் உற்பத்தி பணிகளை பாதித்து இருக்கிறது. இதனால் வினியோகமும் பாதிக்கப்பட்டு உள்ளது," என கியா இந்தியா மூத்த விற்பனை அதிகாரி யங்-சிக் சோன் தெரிவித்தார்.
கியா கேரன்ஸ் எம்.பி.வி. மாடலில் ஸ்ப்லிட் ஸ்டைல் லைட்டிங் செட்டப் உள்ளது. மேலும், எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், மெல்லிய எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், பிரமாண்ட பம்ப்பர் மற்றும் பெரிய ஏர் இன்டேக்குகள் வழங்கப்பட்டு இருக்கிறது. பின்புறம் கூர்மையான தோற்றம் கொண்டிருக்கும் கேரன்ஸ் மாடலில் எல்.இ.டி. டெயில் லேம்ப்கள், எல்.இ.டி. ஸ்ட்ரிப், ஸ்கல்ப்ட் செய்யப்பட்ட டெயில்கேட் வழங்கப்பட்டு உள்ளது.
புதிய கேரன்ஸ் மாடல் அளவில் 4540mm நீளமும், 1800mm அகலமும், 1700mm உயரமும், 2780mm அளவில் வீல்பேஸ் கொண்டிருக்கிறது. அதன்படி அளவில் இந்த கார் மாருதி சுசுகி எர்டிகா, XL6 மற்றும் ஹூண்டாய் அல்கசார் மாடல்களை விட நீளமானது ஆகும். இந்தியாவில் கியா கேரன்ஸ் மாடல் பிரீமியம், பிரெஸ்டிஜ், பிரெஸ்டிஜ் பிளஸ், லக்சரி மற்றும் லக்சரி பிளஸ் என ஐந்து வேரியண்ட்களில் கிடைக்கிறது.
கியா கேரன்ஸ் மாடலில் 1.5 லிட்டர் பெட்ரோல், 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் என இருவித பெட்ரோல் என்ஜின், 1.5 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 113 பி.ஹெச்.பி. திறன், 144 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் யூனிட் 138 பி.ஹெச்.பி. பவர், 242 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. டீசல் என்ஜின் 113 பி.ஹெச்.பி. பவர், 250 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ், 7 ஸ்பீடு டி.ச.டி. மற்றும் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் யூனிட் வழங்கப்படுகிறது.