கேரளாவை சேர்ந்த 67 வயதான ஆண்டனி ஜான் தனக்கென எலெக்ட்ரிக் கார் ஒன்றை உருவாக்கிக் கொள்ள முடிவு செய்தார்.
இந்தியாவில் பொது மக்களிடையே எலெக்ட்ரிக் வாகன பயன்பாடு கடந்த சில ஆண்டுகளாக மெல்ல அதிகரிக்க துவங்கி இருக்கிறது. பயன்படுத்த மிக எளிமையாக இருக்கும் காரணத்தால் பலரும் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க ஆர்வம் செலுத்துகின்றனர்.
எலெக்ட்ரிக் வாகனங்களில் பொதுவாக எலெக்ட்ரிக் கார்களின் விலை அதிகமாகவே நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்திய எலெக்ட்ரிக் வாகன சந்தையில் கிடைக்கும் குறைந்த விலை எலெக்ட்ரிக் கார் மாடல் டாடா டிகோர் EV ஆகும். இந்திய சந்தையில் டாடா டிகோர் EV மாடலின் விலை ரூ. 11 லட்சத்து 99 ஆயிரம், (எக்ஸ்-ஷோரூம்) ஆகும். மேலும் இதனை வாங்க நீண்ட காலம் காத்திருக்க வேண்டிய சூழலும் ஏற்பட்டு இருக்கிறது.
எலெக்ட்ரிக் வாகனம்:
இந்த நிலையில் தான், கேரளாவை சேர்ந்த 67 வயதான ஆண்டனி ஜான் தனக்கென எலெக்ட்ரிக் கார் ஒன்றை உருவாக்கிக் கொள்ள முடிவு செய்தார். இந்த எலெக்ட்ரிக் கார் கொண்டு தனது வீடு மற்றும் அலுவலகங்களுக்கு சென்றுவர அவர் முடிவு செய்தார். முன்னதாக வீட்டில் இருந்து அலுவலகம் சென்றுவர ஆண்டனி ஜான் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை பயன்படுத்தி வந்தார். வயது அதிகமாகிவிட்டதை அடுத்து சூரிய வெளிச்சம் மற்றும் மழையிலும் சிக்காமல் பாதுகாப்பாக பயணம் மேற்கொள்ள எலெக்ட்ரிக் கார் ஒன்றை பயன்படுத்த திட்டமிட்டார்.
டிசைன் மற்றும் எலெக்ட்ரிக்கல் பணி:
அதன்படி 2018 வாக்கில் ஆண்டனி ஜான் தனக்கென எலெக்ட்ரிக் வாகனம் ஒன்றை உருவாக்க முடிவு செய்தார். இதற்காக பாடி கட்டமைப்பை உருவாக்கும் கராஜ் ஒன்றை ஆண்டனி ஜான் அனுகினார். இங்கு காருக்கான வடிவமைப்பை தனது டிசைனின் படி உருவாக்கினார். அளவில் சிறியதாக இருக்கும் எலெக்ட்ரிக் வாகனத்தில் இருவர் அமர்ந்து பயணம் செய்ய முடியும். வொர்க்ஷாப்பில் உருவாக்கப்பட்ட எலெக்ட்ரிக் வாகனத்தின் பாடியினுள் அனைத்து எலெக்ட்ரிக் பணிகளையும் தானே செய்துவிட்டதாக ஆண்டனி ஜான் தெரிவித்தார்.
பேட்டரி மற்றும் மோட்டார்:
அதன்பின் இந்த எலெக்ட்ரிக் வாகனத்திற்கான பேட்டரி, மோட்டார் மற்றும் வயரிங் உள்ளிட்டவைகளை டெல்லியை சேர்ந்த நிறுவனம் ஒன்று செய்து கொடுத்து இருக்கிறது. இதற்கு முன் எலெக்ட்ரிக் வாகனம் ஒன்றை உருவாக்கியது இல்லை என்ற காரணத்தால், 2018 ஆண்டிலேயே இதனை உருவாக்கி முடிக்க முடியாத நிலை ஏற்பட்டு விட்டது. முதலில் இந்த வாகனத்தில் பொருத்தப்பட்ட பேட்டரி முழு சார்ஜ் செய்தால் சிறு தூரம் மட்டுமே செல்ல முடிந்தது.
அதன்பின் கொரோனா வைரஸ் ஊரடங்கில் சில தளர்வுகள் வழங்கப்பட்டதை அடுத்து இவர் காரின் பேட்டரியை மாற்றினார். அதன்பின் இந்த எலெக்ட்ரிக் கார் முழு சார்ஜ் செய்தால் 60 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ் வழங்கி இருக்கிறது. ஆண்டனி ஜான் தினமும் இந்த வாகனத்திலேயே அலுவலகம் சென்று வருகிறார். இதற்கு நாள் ஒன்றிற்கு ரூ. 5 மட்டுமே செலவாகிறது என அவர் தெரிவித்தார்.
விலை:
இந்த எலெக்ட்ரிக் வாகனத்தை உருவாக்க மொத்தத்தில் ரூ. 4.5 லட்சம் வரை செலவானதாக ஆண்டனி ஜான் தெரிவித்தார். இந்த வாகனம் அளவில் சிறியதாக இருப்பதால், இதை கொண்டு நகர போக்குவரத்து நெரிசல்களிலும், சிறு தெருக்களிலும் சிரமம் இன்றி பயணம் செய்ய முடிகிறது என அவர் தெரிவித்தார். இத்துடன் வித்தியாசமான மற்றொரு எலெக்ட்ரிக் வாகனத்தையும் உருவாக்க இருப்பதாக ஆண்டனி ஜான் தெரிவித்தார்.