சென்னையில் உற்பத்தி துவங்கி இருப்பதை அடுத்து ஐபோன் 13 விலை குறைக்கப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 13 மாடலை சென்னையில் உள்ள உற்பத்தி ஆலையில் அசெம்பில் செய்ய துவங்கி இருக்கிறது. முன்னதாக கடந்த ஆண்டு டிசம்பர் மாத வாக்கில் இந்த ஐபோன் மாடலுக்கான உற்பத்தி பணிகள் சோதனை முறையில் துவங்கப்பட்டன. அப்போது, ஐபோன் 13 உற்பத்தி பணிகள் பிப்ரவரி மாத வாக்கில் துவங்கும் என கூறப்பட்டு இருந்தது. எனினும், தற்போது தான் இதன் உற்பத்தி துவங்கி இருக்கிறது.
விலை குறைப்பு:
கடந்த ஆண்டு மார்ச் மாத வாக்கில் ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 12 மாடலை சென்னையில் உள்ள ஃபாக்ஸ்கான் உற்பத்தி ஆலையில் துவங்கியது. பின் செப்டம்பர் மாத வாக்கில் ஐபோன் 13 அறிமுகம் செய்யப்பட்டதும், ஐபோன் 12 மாடலின் விலை ரூ. 14 ஆயிரம் வரை குறைக்கப்பட்டது. சென்னையில் உற்பத்தி துவங்கி இருப்பதை அடுத்து ஐபோன் 13 விலை குறைக்கப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
வரி குறைவில் சேமிப்பு:
இந்தியாவில் புதிய ஐபோன் மாடலை உற்பத்தி செய்வதன் மூலம் ஆப்பிள் நிறுவனம் கணிசமான தொகையை இறக்குமதி வரியில் சேமிக்க முடியும். ஐபோன் SE மாடல் மூலம் 2017 ஆண்டு வாக்கில் ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் ஐபோன்களை உற்பத்தி செய்ய துவங்கியது. தற்போது ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 12 மற்றும் ஐபோன் 13 மாடல்களை உற்பத்தி செய்து வருகிறது. முன்னதாக வெளியான தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் அதிக ஐபோன் மாடல்களை இந்தியாவில் உற்பத்தி செய்ய இருப்பதாக கூறப்பட்டது.
அரசு சலுகை:
இவ்வாறு செய்யும் போது ஐபோன் உற்பத்தியை மெல்ல மெல்ல சீனாவில் இருந்து இந்தியாவுற்கு மாற்ற ஆப்பிள் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. இதுமட்டும் இன்றி மத்திய அரசின் PLI எனப்படும் ப்ரோடக்ஷன் லின்க்டு இன்செண்டிவ் திட்டத்தில் ஆப்பிள் நிறுவனம் சிறப்பு சலுகைகளையும் பெற முடியும்.
இந்தியாவில் செயல்பட்டு வரும் ஆப்பிள் வினியோகஸ்தர்கள் பெரும்பாலும் சூரிய சக்தி மற்றும் காற்றாலை மின்சாரத்தை பயன்படுத்தி வருகின்றனர் என ஆப்பிள் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை மேற்கொள்ளும் வினியோக தளங்கள் எதுவும் பூமியில் தங்கிவிடும் குப்பைகளை வெளியேற்றுவது கிடையாது என்றும் ஆப்பிள் நிறுவனம் தெரிவித்து உள்ளது.
ஆன்லைன் ஸ்டோர்:
ஆப்பிள் நிறுவனம் செப்டம்பர் 2020 ஆண்டு வாக்கில் இந்தியாவில் தனது ஆன்லைன் ஸ்டோரை திறந்தது. தற்போது ஆப்பிள் நிறுவனம் தனது முதல் அதிகாரப்பூர்வ ஆப்பிள் ஸ்டோரை இந்திய சந்தையில் திறக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் முதல் ஆப்பிள் ஸ்டோர் மும்பையில் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாத வாக்கில் திறக்கப்படலாம் என கூறப்படுகிறது.