பிராட்பேண்ட் சேவை வழங்கும் நிறுவனங்கள் பட்டியலில் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளி ஜியோ முதலிடம் பிடித்தது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்திய சந்தையில் ஃபிக்சட்-லைன் பிராட்பேண்ட் சேவைகளை இரண்டு ஆண்டுகளுக்கு முன் அறிமுகம் செய்தது. வர்த்தக முறையில் அறிமுகமான இரண்டே ஆண்டுகளில் ரிலையன்ஸ் ஜியோ பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி இருக்கிறது.
இந்திய பிராட்பேண்ட் சந்தையில் மாதாந்திர பயனர்கள் எண்ணிக்கை அடங்கிய விவரங்களை மத்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் வெளியிட்டுள்ளது. அதன்படி ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஃபிக்சட்-லைன் பிராட்பேண்ட் சேவை பிரிவில் 43.4 லட்சம் வாடிக்கையாளர்களை பெற்று இருப்பதாக டிராய் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த 20 ஆண்டுகளாக இந்த பிரிவில் பி.எஸ்.என்.எல். நிறுவனம் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்தது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் 41.6 லட்சமாக இருந்த ஜியோ ஃபிக்சட்-லைன் பிராட்பேண்ட் பயனர்கள் எண்ணிக்கை நவம்பர் 2021 மாதத்தில் 43.4 லட்சமாக அதிகரித்துள்ளது.
வர்த்தக முறையில் ஃபிக்சட்-லைன் பிராட்பேண்ட் சேவையை ஜியோ நிறுவனம் 2019 செப்டம்பர் மாதத்தில் வழங்க துவங்கியது. 2019 செப்டம்பர் மாதத்தில் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ஃபிக்சட்-லைன் பிராட்பேண்ட் சேவை பயனர்கள் எண்ணிக்கை 86.9 லட்சமாக இருந்தது. இந்த எண்ணிக்கை நவம்பர் 2019 மாத வாக்கில் பாதியாக குறைந்துவிட்டது.
2021 நவம்பரில் பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் வயர்டு பிராட்பேண்ட் பயனர்கள் எண்ணிக்கை 70 சதவீதம் அதிகரித்து 40.8 லட்சமாக மாறியது. முன்னதாக 2019 செப்டம்பரில் ஏர்டெல் பிராட்பேண்ட் பயனர்கள் எண்ணிக்கை 24.1 லட்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் பிராட்பேண்ட் பயனர்கள் எண்ணிக்கை நவம்பர் மாதத்தில் 80.16 கோடியாக அதிகரித்துள்ளது. அக்டோபரில் இந்த எண்ணிக்கை 79.89 கோடியாக இருந்தது. டிராய் வெளியிட்டு இருக்கும் அறிக்கையின் படி தற்போது ஃபிக்சட்-லைன் பிராட்பேண்ட் சந்தையில் ஜியோ முன்னணி நிறுவனமாக உருவெடுத்து இருக்கிறது. நவம்பர் மாத இறுதியில் மொத்த பிராட்பேண்ட் பயனர்கள் எண்ணிக்கையில் 98.68 சதவீத பங்குகளை முதல் ஐந்து நிறுவனங்கள் பிடித்துள்ளன.
நவம்பர் மாத இறுதிவரை ஜியோ பிராட்பேண்ட் பயனர்களின் மொத்த எண்ணிக்கை 43.29 கோடியாக இருக்கிறது. இதைத் தொடர்ந்து பாரதி ஏர்டெல் நிறுவனம் 21.01 கோடியும், வோடபோன் ஐடியா லிமிடெட் 12.24 கோடியும், பி.எஸ்.என்.எல். 2.36 கோடியும், அட்ரியா கன்வெர்ஜன்ஸ் பிராட்பேண்ட் 19.8 லட்சமாக இருக்கிறது.