இந்தியாவில் ஜியோ, ஏர்டெல் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் அதிகரித்துள்ளது. அதே வேளையில், வோடஃபோன் ஐடியாவில் சுமார் 40 லட்சம் பேர் குறைந்துள்ளனர்.
ட்ராய் எனப்படும் இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமானது மொபைல் சந்தாதாரர்கள் மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் குறித்த புள்ளிவிவரங்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த மாதத்திற்கான புள்ளிவிவரங்களை ட்ராய் அமைப்பு வெளியிட்டது.
அதன்படி, ஜியோவில் செப்டம்பர் மாதத்தில் மட்டும் சுமார் 7.24 லட்சம் வாடிக்கையாளர்கள் சேர்ந்துள்ளனர். இதேபோல், ஏர்டெலில் 4.12 லட்சம் வாடிக்கையாளர்கள் சேர்ந்துள்ளனர். ஏர்டெல் நிறுவனத்தின் பங்கு 31.66% இலிருந்து 31.80% ஆகவும், ஜியோ நிறுவனம் 36.48% இலிருந்து 36.66% ஆகவும் அதிகரித்துள்ளது.
ஜியோ, ஏர்டெலுடன் ஒப்பிடுகையில் வோடஃபோன் ஐடியா நிறுவனம் தொடர்ந்து செப்டம்பரம் மாதமும் வீழ்ச்சியைக் கண்டுள்ளது. செப்டம்பர் மாதத்தில் மட்டும் 40 லட்சம் சந்தாதாரர்களை வோடஃபோன் ஐடியா இழந்துள்ளது. இதற்கு காரணம் வோடஃபோன் ஐடியா நெட்வொர்க்கில் 4ஜி சேவை எதிர்பார்த்த அளவில் என்று கூறப்படுகிறது.
மேலும், வயர்லெஸ் பங்கு சந்தையும் இழந்து, 21.75% பங்குகளோடு செப்டம்பர் மாதம் முடிந்தது. ஆகஸ்ட் மாதத்தில் அதன் பங்குகள் 22.03% இருந்தது. செப்டம்பர் மாதத்தில் மட்டும் சுமார் 11.97 மில்லியன் சந்தாதாரர்கள் தங்கள் நெட்வொர்க்கை மாற்றுவதற்கான MNP கோரிக்கை விடுத்துள்ளனர்.
TRAI அறிக்கை எதிரொலி: Jio 4G ரீசார்ஜ் பிளான்களில் விரைவில் கட்டண உயர்வு?
ஜியோவும் ஏர்டெலும் போட்டிப்போட்டுக் கொண்டு 5ஜி சேவை வழங்குவதில் முனைப்பாக உள்ளனர். இதனால், அந்த இரண்டு நெட்வொர்க்குகளிலும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
தற்போதைய நிலவரப்படி, ஜியோ 5ஜி சேவை 8 நகரங்களில் கிடைக்கிறது. அவை: டெல்லி, வாரணாசி, நாக்பூர், பெங்களூர், ஹைதராபாத், மும்பை, சென்னை மற்றும் சிலிகுரி.
இதேபோல், ஏர்டெல் நிறுவனம் தனது 5ஜி சேவையை 12 நகரங்களில் விரிவுபடுத்தியுள்ளது. அவை: டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், சிலிகுரி, குவாஹாத்தி, பானிபட், புனே, நாக்பூர், வாரணாசி மற்றும் குருகிராம் ஆகும்.
ஏர்டெல், ஜியோ இரண்டிலும் பிரத்யேகமாக 5ஜி பிளான்களை வெளியிடவில்லை. மேலும், 5ஜி சேவையை பெறுவதற்கு 5ஜி சிம்கார்டு தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளன. இந்தாண்டு இறுதிக்குள் எல்லா 5ஜி ஸ்மார்ட்போன்களிலும் 5ஜி சேவை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.