ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் நாடு முழுக்க ஆயிரம் நகரங்களில் 5ஜி சேவை வழங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
இந்தியா முழுக்க ஆயிரம் முன்னணி நகரங்களில் 5ஜி நெட்வொர்க் வழங்குவதற்கான ஆயத்த பணிகளை நிறைவு செய்து விட்டதாக ரிலையன்ஸ் ஜியோ அறிவித்து இருக்கிறது. முன்னதாக மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் இந்த ஆண்டு இந்தியாவில் 5ஜி நெட்வொர்க் வெளியீடு நடைபெறும் என அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
அந்த வரிசையில் இந்தியாவில் 5ஜி சேவை வெளியிடும் நிறுவனங்களில் ஜியோ ஆதிக்கம் செலுத்தும் என தெரிகிறது. ஹீட் மேப்ஸ், 3டி மேப்ஸ் மற்றும் ரே டிரேசிங் போண்ற தொழில்நுட்பங்களை பயன்படுத்தி 5ஜி சேவையை வழங்க ரிலையன்ஸ் ஜியோ திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் அதிக பகுதிகளில் மிக சீராக 5ஜி சேவையை வழங்க முடியும்.
":நாடு முழுக்க ஆயிரம் நகரங்களில் 5ஜி சேவை வழங்குவதற்கான ஆயத்த பணிகள் நிறைவு பெற்றுள்ளன. ஜியோ மருத்துவம் மற்றும் தொழில்துறை ஆட்டோமேஷன் உள்ளிட்ட பிரிவுகளில் 5ஜி பயன்பாட்டை சோதனை செய்து வருகிறது," என ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் முதற்கட்டமாக 13 முக்கிய நகரங்களில் மட்டுமே 5ஜி சேவை வெளியிடப்படும் என டிராய் ஏற்கனவே அறிவித்து விட்டது. அந்த வகையில் ரிலையன்ஸ் ஜியோ தனது நெட்வொர்க்கில் 5ஜி சேவை பல கட்டங்களில் வெளியிட திட்டமிட்டு இருக்கிறது. பிரீபெயிட் ரீசார்ஜ் அனுபவத்தை மேம்படுத்த ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வாட்ஸ்அப் உடன் கூட்டணி அமைத்து இருக்கிறது.
டிசம்பர் 2021 வரை நிறைவுற்ற மூன்றாவது காலாண்டில் மட்டும் ஜியோ நிகர லாபம் 8.8 சதவீதம் அதிகரித்து ரூ. 3,795 கோடி ஈட்டியது. முன்னதாக வாடிக்கையாளர்களிடம் இருந்து கிடைத்த ARPU ரூ. 143.6 இல் இருந்து ரூ. 151.60 ஆக அதிகரித்து இருக்கிறது. சமீபத்தில் ஜியோ சலுகை கட்டணங்கள் உயர்த்தப்பட்டதை அடுத்து இந்த வளர்ச்சி ஏற்பட்டு இருக்கிறது.