2018ஆம் ஆண்டில், தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால் தடை செய்யப்பட்ட இணைய முகவரிகள் எண்ணிக்கை 2,799 ஆக இருந்த நிலையில், இந்த ஆண்டு அக்டோபர் வரை 7,502 இணைய முகவரிகள் முடக்கப்பட்டுள்ளன.
2018 முதல் 2023 அக்டோபர் மாதம் வரை சமூக ஊடக நிறுவனங்களில் 36,838 இணைய முகவரிகளை பிளாக் செய்யுமாறு மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை உத்தரவிட்டுள்ளது என அத்துறையின் இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார்.
தகவல் தொழில்நுட்பம் சட்டம், 2000 இன் பிரிவு 69A இன் கீழ், நாட்டின் ஒருமைப்பாடு, பாதுகாப்பு, வெளி மாநிலங்களுடனான நட்புறவு அல்லது பொது ஒழுங்கை சீர் குலைக்கும் விதமான அல்லது குற்றங்களைத் தூண்டும் விதமான பதிவுகள் கொண்ட இணையதளங்கள் முடிக்கப்படுகின்றன என அமைச்சர் ராஜீவ் கூறியுள்ளார்.
மாக்சிஸ்ட் கட்சி எம்.பி. ஜான் பிரிட்டாஸ் எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்தபோது இதனைத் தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் மற்றும் பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடக தளங்களில் பதிவுகள், கணக்குகள் அல்லது ஹேஷ்டேகுகளை பிளாக் செய்ய அல்லது அகற்ற மத்திய அரசு பிறப்பித்த உத்தரவுகளின் விவரங்களையும் பகிருமாறு ஜான் பிரிட்டாஸ் கேட்டிருந்தார்.
இதற்கு பதில் அளித்துள்ள அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், 2018 முதல் இந்த ஆண்டு அக்டோபர் வரை, அதிகபட்சமாக ட்விட்டர் சமூக வலைத்தள நிறுவனத்துக்கு மத்திய அரசு 13,660 உத்தரவுகளை அனுப்பியுள்ளது என்று என்று கூறினார்.
2018 இல் 224 உத்தரவுகள் அனுப்பப்பட்ட நிலையில், இந்த எண்ணிக்கை 2019 இல் 1041 வும் 2020 இல் 2,731 ஆகவும் 2021 இல் 2,851 ஆகவும் 2022 இல் 3,423 ஆவும் கூடியுள்ளது. 2023 இல் அக்டோபர் வரை 3,390 உத்தரவுகள் ட்விட்டருக்கு அனுப்பப்பட்டுள்ளன.
2018 முதல் இந்த ஆண்டு அக்டோபர் வரை, பேஸ்புக்கிற்கு 10,197 உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன. இன்ஸ்டாகிராமுக்கு 3,023 உத்தரவுகளும், யூடியூப்பிற்கு 5,759 உத்தரவுகளும் பிற சமூக ஊடகங்களுக்கு 4,199 உத்தரவுகளும் அனுப்பப்பபட்டுள்ளன என்று அமைச்சர் ராஜீவ் குறிப்பிட்டுள்ளார்.
"இந்தியாவில் இணையம் பாதுகாப்பாகவும், நம்பகமானதாகவும் இருப்பதையும் அனைத்து பயனர்களும் பொறுப்புணர்வுடன் இருப்பதையும் உறுதி செய்வதுதான் அரசின் கொள்கை" என்று ராஜீவ் சந்திரசேகர் கூறியிருக்கிறார்.
2018ஆம் ஆண்டில், தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால் தடை செய்யப்பட்ட இணைய முகவரிகள் எண்ணிக்கை 2,799 ஆக இருந்த நிலையில், இந்த ஆண்டு அக்டோபர் வரை 7,502 இணைய முகவரிகள் முடக்கப்பட்டுள்ளன. 2020 இல், அதிகபட்சமாக 9,849 இணைய முகவரிகள் சமூக வலைத்தளங்களால் முடக்கப்பட்டன.