மங்கலான விரல் ரேகைகள் அல்லது பிற குறைபாடுகள் உள்ளவர்களுக்கு மாற்று பயோமெட்ரிக் பதிவு மூலம் ஆதார் வழங்க அனைத்து ஆதார் சேவை மையங்களுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
கேரளாவில் ஒருவருக்கு விரல்கள் இல்லாத காரணத்தால் ஆதார் பதிவு செய்ய முடியாமல் போனதை அறிந்த மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், அவருக்கு உடனடியாக ஆதார் கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
கேரளாவில் உள்ள கோட்டயம் மாவட்டத்தில் உள்ள குமரகத்தைச் சேர்ந்தவர் ஜோசிமோல் பி ஜோஸ். ஆதார் ஆணையத்தின் அதிகாரிகள் அவரது வீட்டிற்குச் சென்று ஆதார் எண் வழங்கியுள்ளனர். பல்வேறு அரசுத் திட்டங்களில் பயன்பெற ஆதார் எண் உதவும் என்பதால், இந்த உதவியைச் செய்த அதிகாரிகளுக்கு பெண்ணின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கூறியிருக்கும் அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், “ஜோசிமோல் பி ஜோஸ் போன்றவர்களுக்கும் மங்கலான கைரேகைகள் அல்லது பிற குறைபாடு உள்ளவர்களுக்கும் மாற்று பயோமெட்ரிக் மூலம் ஆதார் வழங்கப்பட வேண்டும் என்று அனைத்து ஆதார் சேவை மையங்களுக்கும் ஆலோசனை அனுப்பப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
ஆதார் ஆணையம் சிலருக்கு பயோமெட்ரிக் பதிவு செய்வதில் இருந்து விதிவிலக்கு வழங்குகிறது. முதுமை அல்லது தொழுநோய் காரணமாக வெட்டு, காயம், கட்டு, காய்த்துப் போன அல்லது வளைந்த விரல்கள் இருந்தால் கைரேகை பதிவு செய்யத் தேவையில்லை. கருவிழிகள் பதிவுசெய்ய முடியாத சூழலிலும் விதிவிலக்கு வழங்கப்படும்.
கைரேகைகளை பதிவுசெய்ய முடியாதவர் கருவிழி ஸ்கேன் மட்டும் செய்து ஆதார் பெறலாம். இதேபோல், கருவிழிகளை ஸ்கேன் செய்ய முடியவில்லை என்றால், கைரேகையை மட்டும் பயன்படுத்த ஆதார் பெறலாம். கைரேகை மற்றும் கருவிழி இரண்டையும் வழங்க முடியாத நபர் இரண்டும் இல்லாமலே ஆதார் அட்டை பெறலாம்.
அத்தகைய நபர்களுக்கு, பயோமெட்ரிக் விதிவிலக்கு பதிவு வழிகாட்டுதல்களின் கீழ், பெயர், பாலினம், முகவரி மற்றும் பிறந்த தேதி / பிறந்த ஆண்டு ஆகிய தகவல்களுடன் ஆதார் அட்டை வழங்கப்படும்.