அது நடக்காமல் போனதற்கு ஒரே ஒருத்தர்தான் காரணம்... இஸ்ரோ சிவனை ஒட்டு மொத்தமாக புரட்டிப்போட்ட நிகழ்வு..!

By Thiraviaraj RMFirst Published Sep 10, 2019, 3:39 PM IST
Highlights

எல்லா இடங்களிலும் சிவன் விரும்பியது ஏதும் நிறைவேறியதே இல்லை. விரும்பியது கிடைக்கவில்லை என்றாலும் கிடைத்ததை விரும்பத்துடன் செய்து அசத்தி விடுவார். 
 

எல்லா இடங்களிலும் சிவன் விரும்பியது ஏதும் நிறைவேறியதே இல்லை. விரும்பியது கிடைக்கவில்லை என்றாலும் கிடைத்ததை விரும்பத்துடன் செய்து அசத்தி விடுவார். 

இந்தியாவின் இஸ்ரோ தலைவரான டாக்டர் சிவனின் வாழ்க்கை கந்தல் துணியிலிருந்து தொடங்கியது. ஒரு சிறு விவசாயின் மகன் கல்லூரியில் படிக்கும் வரை செருப்பு கூட அணியாமல் இருந்துள்ளார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த 62 வயதான ராக்கெட் விஞ்ஞானி சிவன், கடந்த 2018 ஜனவரி மாதம் இஸ்ரோவின் தலைவராக கிரண் குமாருக்கு பதிலாக நியமிக்கப்பட்டார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சரக்கல்விளை கிராமத்தைச் சேர்ந்த சிவன், உள்ளூரில் உள்ள அரசு பள்ளியில் படித்தவர். பின்னர் நாகர்கோவியில் உள்ள ஹிந்து கல்லூரியில் கணிதப்பாடம் படித்து பட்டம் நான்கு பாடங்களில் 100 க்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இதுவரை அவர் டியூசனுக்கோ, பயிற்சி வகுப்புகளுக்கோ போனதே இல்லை. 

இவரது தந்தை கைலாசவடிவு மாங்காய் விற்றதோடு, அவர்களுக்கு இருந்த நிலத்தில் விவசாயம் செய்து வந்தார். மாணவ பருவத்தில் பள்ளி, கல்லூரி முடிந்து தந்தையின் மாங்காய் தோட்டத்தில் பணியாற்றக் கிளம்பி விடுவார் சிவன். இவர் தோட்டத்தில் பணியாற்றும் போது தந்தைக்கு வேலையாட்களுக்கு கூலி மிச்சப்படுத்தப்படும் என்பதால் உற்சாகமாக பணிபுரிந்துள்ளார். அதே போல சென்னையில் எம்.ஐ.டி கல்லூரியில் படிக்க சேர்ந்த போது தான் முதல் முதலாக செருப்பு அணியவே தொடங்கினார். 

வழக்கமாக ஒவ்வொருவரும் கல்லூரிகளை தேர்ந்தெடுக்க வெவ்வேறு விருப்பத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுப்பார்கள். ஆனால் சிவனின் தந்தையின் விருப்பப்படி வீட்டிற்கு அருகில் இருக்கிற கல்லூரியை தேர்ந்தெடுந்தார். அப்போதுதான் அவருக்கு மாந்தோட்டத்தில் உதவ முடியும் என நினைத்து சேர்த்து விட்டனர். தந்தையால் தனது பொறியியல் படிப்புக்கு நிதியளிக்க முடியவில்லை என்பதால் இளங்கலை அறிவியல் படிப்பைத் தொடர்ந்துள்ளார். ஆனால், சிவன் பொறியியல் படிக்கவே விரும்பினார். அவரது தந்தையால் செலவிட முடியாததால் இளங்கலை அறிவியல் படித்துள்ளார். 

பொறியியல் படிக்க வைக்க அப்பா மறுத்ததால் இரண்டு வாரங்களாக சரியாக சாப்பிடாமல் அடம் பிடித்துள்ளார் சிவன். அதன் பிறகு அப்பா பேச்சை கேட்டு இளங்கலை அறிவியல் படித்துள்ளார். ஒருவேளை சிவனின் விருப்படி பொறியியல் படித்திருந்தால் அவர் இப்போது சிவன் இஸ்ரோ தலைமை விஞ்ஞானியாக இருந்திருப்பாரா என்பதே சந்தேகம் தான். இந்த ஒரு நிகழ்வு தான் அவரது ஒட்டு மொத்த வாழ்க்கையையும் மாற்றி இருக்கிறது.

 

அதன்பின், எம்.ஐ.டியில் பிடெக் படித்துள்ளார். பின் வேலையில்லாமல் கஷ்டப்பட்டுள்ளார். காரணம் அந்த சமயத்தில் ஏரோநாட்டிக்கல் படிப்புக்கான வேலை மிகவும் குறைவாகவே இருந்தது. இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் லிமிடெட், நேஷனல் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் ஆகியவற்றில் மட்டுமே நோக்கம் இருந்தது. அதன் பின் ஐ.ஐ.எஸ்சியில் மேல் படிப்புக்கு சென்றுள்ளார். 

டாக்டர் சிவனுக்கு தனது முழு வாழ்க்கையிலும் அவர் விரும்பியது ஏதும் நிறைவேறவில்லை. ஆனால், அவருக்கு கிடைத்த வாய்ப்பினை சிறப்பாக செய்தார். செயற்கைக்கோள் மையத்தில் சேர விரும்பி இருக்கிறார். ஆனால், விக்ரம் சரபாய் மையத்தில் வாய்ப்பு கிடைத்தது. அங்கேயும் ஏரோடைனமிக்ஸ் குழுவில் சேர விரும்பியுள்ளார். கிடைக்கவில்லை என்பதால் பி.எஸ்.எல்.வி திட்டத்தில் சேர்ந்துள்ளார். எல்லா இடங்களிலும் அவர் விரும்பியது ஏதும் கிடைக்கவில்லை என அவ்வப்போது வருத்தப்படுவார். விரும்பியது கிடைக்கவில்லை என்றாலும் கிடைத்ததை விரும்பத்துடன் செய்து அசத்தி விடுவார். 

click me!