சென்னை எண்ணூர் அசோக் லேலண்ட் தொழிற்சாலை இம்மாதம் 16 நாட்களும், ஓசூர் தொழிற்சாலை 5 நாட்களும் உற்பத்தி நிறுத்தம் என நிர்வாகம்
அறிவித்துள்ளது. வணிக ரீதியான வாகனங்கள் விற்பனையில் சரிவு ஏற்பட்டுள்ளதை அடுத்து அசோக் லேலண்ட் நிறுவனம் இந்த நடவடிக்கையை
மேற்கொண்டுள்ளது.
சென்னை எண்ணூர் அசோக் லேலண்ட் தொழிற்சாலை இம்மாதம் 16 நாட்களும், ஓசூர் தொழிற்சாலை 5 நாட்களும் உற்பத்தி நிறுத்தம் என நிர்வாகம் அறிவித்துள்ளது. வணிக ரீதியான வாகனங்கள் விற்பனையில் சரிவு ஏற்பட்டுள்ளதை அடுத்து அசோக் லேலண்ட் நிறுவனம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
இந்திய பொருளாதார மந்தநிலை காரணமாக தொடர்ச்சியாக உற்பத்தி தொழிலில் இருக்கக்கூடிய நிறுவனங்கள் ஒவ்வொன்றாக தங்களுடைய நிறுவனத்தில் இருக்கும் பணியாளர்களுக்கு கட்டாய விடுப்பு வழங்கி வருகின்றனர். மேலும் பல இடங்களில் உற்பத்தி பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. டிவிஎஸ், மாருதி சுசூகி மற்றும் ஹீரோ உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் பல தனது பணியாளர்களுக்கு கட்டாய விடுப்பு அளித்து வருகின்றனர். முன்னதாக மாருதி நிறுவனம் ஹரியானவில் உள்ள தொழிற்சாலையை செப்டம்பர் 7, 9 தேதிகளில் மூடுவதாக தெரிவித்திருந்தது.
இந்நிலையில், முக்கிய ஆட்டோமொபைல் நிறுவனங்களில் ஒன்றான அசோக் லேலண்ட் சென்னையைத் தலைமை இடமாகக் கொண்டு இயங்கி வருகிறது. இந்நிறுவனம் சென்னை எண்ணூர் ஆலையில் 16 நாட்களுக்கு உற்பத்தியை நிறுத்துவதாக தற்போது அறிவித்துள்ளது. அத்துடன் ஓசூரின் 1 மற்றும் 2-வது உற்பத்தி மையங்களை 5 நாள்கள் மூடுவதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆலைகளின் உற்பத்தி நிறுத்தம் தொடர்பாக தேசிய பங்குச் சந்தைக்கு அசோக் லேலண்ட் நிறுவனம் கடிதமும் அனுப்பியுள்ளது. மும்பை பந்த்ரா, ராஜஸ்தானின் அல்வாரில் தலா 10 நாள்களும், உத்ராகண்ட் பந்த்நகரில் 18 நாள்களுக்கும் உற்பத்தி நிறுத்துவதாகவும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. ஏற்கனவே இந்நிறுவனம் 5 நாட்கள் கட்டாய விடுமுறை அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.