ட்விட்டரில் தேடல் அம்சத்தை சரிசெய்ய பணியமர்த்தப்பட்ட ‘ஐபோன் ஹேக்கர்’ பணிச்சுமை தாங்காமல் ஒரே மாதத்தில் ராஜினாமா செய்தார்.
எலோன் மஸ்க் ட்விட்டரை நிறுவனத்தை புதிய அணிகள், புதிய இலக்குகளுடன் மீண்டும் உருவாக்கி வருகிறார். அக்டோபரில் டுவிட்டரை கையகப்படுத்தப்பட்ட உடனேயே, ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்தார், மேலும் புதிய ஆக்கப்பூர்வ சிந்தனைகளையும், அயராது உழைப்பவர்களையும் வேலைக்கு எடுக்க திட்டமிட்டார். மொத்தத்தில் புதிதாக Twitter 2.0 ஐ உருவாக்க விரும்புவதாகவும் கூறினார்.
அந்த வகையில், மஸ்க் சமீபத்தில் ஜார்ஜ் ஹாட்ஸ் என்பவரை 12 வாரங்களுக்கு ட்விட்டர் பயிற்சி பணியாளராக நியமித்தார். இவர் கடந்த 2007 ஆம் ஆண்டு ஐபோன்களை ஹேக் செய்தவர். அவரை பணியில் எடுத்து ட்விட்டர் தேடல் அம்சத்தை சரிசெய்ய விரும்பினார் எலான் மஸ்க். ஆனால் எலான் மஸ்க்கின் கடினமாக உழைக்க வேண்டும் என்ற வேலை கலாச்சாரத்தை ஹேக்கரால் பின்பற்ற முடியவில்லை.
நவம்பர் இரண்டாம் பாதியில் ஹாட்ஸ் ட்விட்டரில் பயிற்சியாளராக சேர்ந்தார். வந்த ஒரே மாதத்திற்குள், ஹாட்ஸ் ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இதனால் அவர் ட்விட்டர் பணியாளர் குழுவில் இல்லை. அவர் தனது பதவியை ராஜினாமா செய்தாரா அல்லது மஸ்க் அவரை வெளியேறச் சொன்னாரா என்பதை ஹாட்ஸ் வெளிப்படுத்தவில்லை.
\ Twitter, Facebook, Google வரிசையில் Xiaomi நிறுவனத்திலும் ஆட்குறைப்பு நடவடிக்கை ஆரம்பம்!
ஹாட்ஸ் ட்விட்டரை விட்டு வெளியேறுவதற்கான காரணத்தைக் குறிப்பிடவில்லை என்றாலும், அவரது கடந்தகால ட்வீட்களை வைத்து பார்க்கும் போது, அவருக்கும் மஸ்க்கிற்கும் இடையில் பணியில் முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. ஹாட்ஸ் சமீபத்தில் ஒரு கருத்துக்கணிப்பை நடத்தினார். அதில் அவர் ட்விட்டர் பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமா என்று ட்விட்டர் பயனர்களிடம் கேட்டார். பெரும்பாலான பயனர்கள் இந்த முடிவுக்கு எதிராக வாக்களித்தனர், ஆனால் ஹாட்ஸ் அதையும் மீறி ராஜினாமா செய்துள்ளார். இப்போது ட்விட்டரில் இருந்து வெளியேறிவிட்டார்.
தற்போது எலான் மஸ்க்கு ட்விட்டர் 2.0 தளத்தை மீண்டும் உருவாக்குவது மட்டுமில்லாமல், புதிய ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரியைத் தேடுகிறார். ஆனால் அதிகாரத்தை விட்டு கொடுக்கவில்லை. “வேலை எடுக்கும் அளவுக்கு முட்டாள்தனமாக யாரையாவது கண்டால் நான் விரைவில் CEO பதவியை ராஜினாமா செய்வேன்! அதன் பிறகு, நான் மென்பொருள் மற்றும் சேவையக குழுக்களை முன்னின்று நடத்துவேன் ” என்று எலான் மஸ்க் ட்வீட் ஒன்றில் கூறினார். மஸ்க் அதிகாரப்பூர்வமாக ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து விலக விரும்பினாலும், அவர் தனது அதிகாரத்தை யாருக்கும் விட்டுக்கொடுக்க விரும்பவில்லை என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது.