தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் எலெக்ட்ரிக் வாகனங்களில் சரி செய்யப்பட வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம் ஆகும்.
ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் புதிதாக பேட்டரி செக்கப் அண்ட் கேர் நிகழ்வை அறிவித்து இருக்கிறது. இந்த நிகழ்வு ஏப்ரல் மாதம் முழுக்க நடைபெறும் என ஹீரோ எலெக்ட்ரிக் அறிவித்து இருக்கிறது. எலெக்ட்ரிக் வாகனங்களின் பாதுகாப்பு குறித்து வாடிக்கையாளர்கள் மத்தியில் இருக்கும் அச்சம் மற்றும் கவலைகளை போக்கும் வகையில், இந்த நிகழ்வு நடத்தப்படுகிறது. இது முற்றிலும் இலவசமாகவே நடத்தப்படுகிறது.
நம்பிக்கை அதிகரிக்கும்:
இந்தியாவில் பல பகுதிகளில் எலெக்ட்ரிக் வாகனங்கள் வெடித்து தீப்பிடித்து எரியும் சம்பவங்கள் அதிகளவில் அரங்கேறி வருகிறது. இதை அடுத்து, வாடிக்கையாளர்கள் மத்தியில் எலெக்ட்ரிக் வாகனங்கள் மீது இருந்த நம்பிக்கை குறைந்து விட்டது. இது போன்ற நிகழ்வுகளால் வாடிக்கையாளர்களுக்கு எலெக்ட்ரிக் வாகனங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும்.
சேவை:
ஹீரோ எலெக்ட்ரிக் ஏற்பாடு செய்து இருக்கும் பேட்டரி செக்கப் நிகழ்வுகளில் சுமார் 4.5 லட்சம் வாடிக்கையாளர்கள் நாடு முழுக்க செயல்பட்டு வரும் சுமார் 750-க்கும் அதிக விற்பனை மையங்களில் பேட்டரி பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு குறித்து சந்தேகங்களை கேட்டு விளக்கம் பெற்றுக் கொள்ள முடியும். மேலும் அவர்களின் எலெக்ட்ரிக் வாகனங்களை இலவசமாக செக்கப் செய்து கொள்ள முடியும்.
இதுதவிர விற்பனை மையங்களில் உள்ள ஊழியர்கள் எலெக்ட்ரிக் வாகனத்தின் பேட்டரி சீரற்ற முறையில் இயங்குவதற்கான அறிகுறிகள் பற்றியும் விளக்கம் அளிக்க உள்ளனர்.
பாதுகாப்பு அவசியம்:
"எலெக்ட்ரிக் வாகன பாதுகாப்பு குறித்து அதிரடியான நடவடிக்கை எடுப்பதற்கான தேவை அதிகரித்து உள்ளது. தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் எலெக்ட்ரிக் வாகனங்களில் சரி செய்யப்பட வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம் ஆகும். பேட்டரி மற்றும் சார்ஜிங் சிஸ்டம் பற்றிய விவரங்களை அறிந்து வைத்துக் கொள்ள வேண்டியது மிகவும் அத்தியாவசியமானது," என ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவன தலைமை செயல் அதிகாரி சொஹிந்தர் கில் தெரிவித்தார்.
"வாகனம் வாங்கும் போதே வாடிக்கையாளர்கள் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய கையேடு வழங்கப்பட்டு வருகிறது. இவற்றை பின்பற்றினாலே வாடிக்கையாளர்கள் தங்களின் வாகனங்களை முறையாக பராமரித்துக் கொள்ள முடியும். எனினும், இதுபோன்ற நிகழ்வுகள் பேட்டரிகளை நல்ல முறையில் வைத்துக் கொள்வதற்கான அவசியத்தை அனுபவம் வாய்ந்த டெக்னீஷியன்கள் மூலம் வாடிக்கையாளர்கள் அறிந்து கொள்ளலாம்," என அவர் மேலும் தெரிவித்தார்.