இந்தியாவிலுள்ள கூகுள் அலுவலகத்தில் 450 பேருக்கு மேல் பணி நீக்கம்!

By Asianet Tamil  |  First Published Feb 18, 2023, 6:19 PM IST

இந்திய கூகுள் அலுவலகத்தில் பல்வேறு துறைகளில் பணிபுரிந்து வந்த சுமார் 450க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.


இந்தியாவில் பல்வேறு துறைகளில் 450க்கும் மேற்பட்ட ஊழியர்களை கூகுள் நிறுவனம் பணி நீக்கம் செய்துள்ளது. சரியாக மொத்தம் எத்தனை பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர் என்பது குறித்த குறித்த கேள்விக்கு கூகுள் தரப்பில் பதில் இல்லை. இருப்பினும் குறைந்தது 450 பணியாளர்கள் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்று தகவல்கள் வந்துள்ளன.

கடந்த வியாழனன்று இரவு, பாதிக்கப்பட்ட இந்தியா மற்றும் சிங்கப்பூர் ஊழியர்கள் கூகுளிடமிருந்து பணிநீக்கக் கடிதங்களைப் பெற்றனர். பாதிக்கப்பட்ட பல இந்திய ஊழியர்கள் தங்கள் வேதனைகளை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டனர். கூகுளின் கூட்டாளர் மேம்பாட்டு மேலாளர் சாகர் கில்ஹோத்ரா தனது லிங்க்ட்இன் பக்கத்தில், பணி நீக்க நடவடிக்கை தனது வாழ்க்கையே புரட்டி போட்டுவிட்டதாக கூறியுள்ளார்.

Tap to resize

Latest Videos

அந்த பதிவில் அவர் கூறுகையில்,  “எனது குழுவிற்காக நான் 24 மணி நேரமும் உழைத்தேன், இந்தியாவில் YouTube நேரலை ஷாப்பிங்கை மேம்படுத்த உதவினேன்... எனது பங்களிப்புகளைத் தாண்டி, திறமையானவர்கள் கைவிடப்படுவதைப் பார்ப்பது மனவேதனை அளிக்கிறது," என்று அவர் கூறினார். மற்றொரு கூகுள் ஊழியர், இந்தியாவில் உள்ள தனது கூகுள் நண்பர்கள் பலர் தற்போதைய பணிநீக்கச் செயல்முறையால் பாதிக்கப்பட்டுள்ளதை பல்வேறு பிரிவுகளில் இருந்து அறிந்து கொண்டதாகக் கூறினார்.

சிங்கப்பூர் ஊழியர்  கிளிஃபோர்ட் தியோ என்பவர் தனது பங்கு தேவையற்றது மற்றும் முக்கிய குழு உறுப்பினர்களுடன் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது,  "இது எனக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது, சில மாதங்களுக்கு முன்புதான் நான் பதவி உயர்வு பெற்று தென்கிழக்கு ஆசியா டேலண்ட் என்கேஜ்மென்ட் குழுவை வழிநடத்திச் சென்றேன், அதற்குள் இப்படி ஆகிவிட்டதே’  என்று அவர் கூறினார். 

ஏற்கெனவே கடந்த ஜனவரி மாதம் கூகுள் மற்றும் ஆல்பாபெட் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை உலகளவில் 12,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்தார். அமெரிக்காவுக்கு பிறகு பிற நாடுகளில், அந்தந்த உள்ளூர் நடைமுறைகளுக்கு ஏற்ப ஊழியர்கள் பணி நீக்கம் நடைபெறும் என்று கூறியிருந்தார்.

இந்திய டுவிட்டர் அலுவலகம் மூடல்! பணியாளர்களை வீட்டிலிருந்தபடி வேலை செய்ய அறிவுறுத்தல்!!

இதற்கிடையில், யூடியூப்பின் தலைமை நிர்வாக அதிகாரியாக ஒன்பது ஆண்டுகளாக இருந்த சூசன் வோஜ்சிக்கி வியாழக்கிழமை தனது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார், மேலும் இந்திய வம்சாவழியான நீல் மோகன் கூகுளின் வீடியோ பிரிவு யூடியூப்பின் புதிய சிஇஓ ஆக வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

click me!