இந்திய தொழிற்சங்கத் தலைவர் அனசுயா சாராபாயின் 132-வது பிறந்தநாளையொட்டி அவருக்கு சிறப்பு சேர்க்கும் வகையைில், கூகுள் நிறுவனம் தனது முகப்புப் பக்கத்தில் டூடுள் வைத்துள்ளது. 1885ஆம் ஆண்டு நவம்பர் 11 ஆம் தேதி பிறந்தவர் அனசுயா சாராபாய். இவர் தமது குழந்தைப்பருவத்திலேயே தாய், தந்தையை இழந்தார். 13 வயதில் திருமணம் செய்தாலும் மணவாழ்க்கை சரியாக அமையவில்லை. இதையடுத்து அவரது சகோதரர் உதவியால் 1912ல் லண்டனுக்கு மருத்துவம் பயிலச் சென்றார். 1913-ம் ஆண்டிலேயே லண்டனில் இருந்து இந்தியா திரும்பிய அவர், இந்தியாவில் பெண்களின் நிலையை கண்டறிந்து பெண்கள் மற்றும் ஏழைகள் நலனுக்காகப் போராடத் தொடங்கினார். ஜவுளித் தொழிலில் ஈடுபட்ட பெண்களுக்காக போராடி கூலி உயர்வை பெற்று தந்தார். இந்தியாவின் மிகப் பழைமையான துகில் தொழிலாளர்களின் சங்கமான 'அகமதாபாத் ஜவுளித் தொழிலாளர்கள் சங்கம்' என்னும் கூட்டமைப்பை 1920ல் உருவாக்கினார். இதனால், அனுசுயா சாராபாய் இந்தியாவின் பெண்கள் தொழிலாளர் இயக்கத்தின் முன்னோடியாகத் திகழ்ந்தார். தொழிற்சங்க தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். காந்தியின் நன்மதிப்பைப் பெற்ற அனுசுயா 1972ல் இயற்கை எய்தினார்.