ஜெமினி என்ற புதிய செயற்கை நுண்ணறிவு மாடல் ஒன்றை கூகிள் நிறுவனம் அறிவித்துள்ளது. தற்போது இது ஆரம்பக் கட்ட சோதனையில் உள்ளது.
கூகிள் நிறுவனம் ஜெமினி என்ற புதிய செயற்கை நுண்ணறிவு மாடல் ஒன்றை I/O 2023 இல் அறிவித்துள்ளது. ஜெமினி மாடல் இன்னும் வளர்ச்சி கட்டத்தில் இருப்பதாகவும், பாதுகாப்புக்காக சோதனைகளைச் செய்துவருவதாகவும் நிறுவனம் கூறியுள்ளது. ஆரம்பக் கட்ட சோதனைக்காக நிறுவனத்திற்குள் ஒரு சிறிய குழுவினர் மட்டும் இந்த மாடலை அப்போது பயன்படுத்தி வருகிறார்கள். இது விரைவில் கூகுள் பிசினஸ் பயனர்களுக்கும் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.
நிறுவனத்துக்கு வெளியே மற்ற டெவலப்பர்களுக்கு இந்த மென்பொருளை பயன்பாட்டுக்கு வழங்குவது, Bard AI சாட்பாட் சேவையில் இதை இணைப்பது போன்ற திட்டங்களுடன் கூகிள் இயங்கி வருகிறது.
undefined
விரைவில் ஜெமினி மாடலை கூகுள் கிளவுட் சேவையின் ஒரு பகுதியாக வணிக நிறுவனங்களுக்கு விற்பனை செய்யத் தொடங்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
ஜெமினி என்றால் என்ன?
ஜெமினி எல்.எல்.எம் (LLM) எனப்படும் செயற்கை நுண்ணறிவு சாட்போட்கள் செயல்படுவதற்கு அடிப்படையான தொழில்நுட்பம் ஆகும். சாட்பாட்கள் பயனர்கள் எழுத்து வடிவில் கொடுக்கும் உள்ளீடுகளைப் பெற்ற, அதற்கு ஏற்ற கட்டுரைகளை வழங்கக்கூடியவை. வழக்கமான ஈமெயில்களை எழுதுவது, பாடல்கள் எழுதுவது போன்ற பயனர்கள் விரும்பும் விதமான எழுத்தை சாட்பாட் கொடுக்கும். கட்டுரைகளை சுருக்கவும், சாப்ட்வேர் டெவலப்பர்கள் கோடிங் எழுத உதவவும் திறன் கொண்டது ஜெமினி சாட்பாட் என்று கூகுள் சொல்கிறது.
ஜெமினி பல தேவைகளுக்கு பயன்படக்கூடிய ஒரு மாடல் என்றும் API இணைப்பு மூலம் பயன்படுத்தக் கூடியது என்றும் கூகுள் கூறுகிறது. மெமரி மற்றும் திட்டமிடல் தொடர்பான எதிர்கால கண்டுபிடிப்புகளுக்கு துணைபுரியும் வகையில் உருவாக்கப்பட்டுள்தாகவும் கூகுள் தெரிவிக்கிறது. கூகுள் நிறுவனம் இதற்கு முன் உருவாக்கிய AI மாடல்களில் காணப்படாத மல்டிமாடல் திறன்கள் இதன் குறிப்பிடத்தக்க சிறப்பு அம்சம் ஆகும்.
Open AI உடன் போட்டி போடும் ஜெமினி
OpenAI நிறுவனத்தின் GPT-4 சாட்பாட்க்கு போட்டியாக கூகுளின் ஜெமினி இருக்கும் எனக் கூறப்படுகிறது. மைக்ரோசாப்ட் ஏற்கனவே Office 365 மென்பொருள்களில் OpenAI இன் GPT-4 மற்றும் DALL-E மாடல்களை இணைத்துள்ளது. அதன் மூலம் ஏற்கெனவே நிறுவனத்திற்கு வருமானத்தைத் தரத் தொடங்கியுள்ளது. வேறு சில நிறுவனங்ககளும் ஏற்கனவே OpenAI நிறுவனத்தின் AI மாடலை பயன்படுத்த முடிவு செய்துள்ளன.
இருந்தாலும் கூகுளைப் பொறுத்தவரை, ஜெமினி மாடலுக்கு மார்க்கெட்டில் அதிகமான வாய்ப்புகள் இருப்பதாகக் கருதப்படுகிறது. இந்த ஆண்டு கூகுள் நிறுவனம் ஜெனரேட்டிவ் AI தொழில்நுட்பத்தில் முதலீடுகளை தீவிரப்படுத்தியுள்ளது. மைக்ரோசாப்ட் ஆதரவுடன் OpenAI கடந்த ஆண்டு ChatGPT ஐ அறிமுகப்படுத்திய முதல் கூகுள் நிறுவனம் அதேபோன்ற மாடல் ஒன்றை உருவாக்க களமிறங்கியது.
கூகிள் ஜெமினியை தனது Bard AI சாட்பாட் முதலான பல சேவைகளில் ஒருங்கிணைக்க திட்டமிட்டுள்ளது. அவ்வாறு செய்வதன் மூலம், அந்தச் சேவைகளுக்கு செயற்கை நுண்ணறிவு திறன்களை வழங்க விரும்புகிறது. ஆனால், தங்கள் AI மாடல்களை வணிக பயன்பாட்டுக்குக் கொடுப்பதற்கு முன்பு அதன் பாதுகாப்பை உறுதி செய்ய விரும்புவதாக கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை கூறியிருக்கிறார்.