
தொழில்நுட்ப உலகில் கூட்டப் பணி நீக்கங்கள் தொடரும் நிலையில், அமெரிக்காவின் அசுர நிறுவனமான Google-ம் தற்போது அதில் இணைந்துள்ளது. அண்மையில் வெளியான CNBC அறிக்கையின்படி, Google தனது கிளவுட் (Cloud) பிரிவில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட வடிவமைப்பாளர்களை (Designers) பணி நீக்கம் செய்துள்ளது. இது செயற்கை நுண்ணறிவில் (Artificial Intelligence - AI) அதிக கவனம் செலுத்தும் நிறுவனத்தின் ஒரு பகுதியாகவே பார்க்கப்படுகிறது. ஊழியர்களை AI-யில் கவனம் செலுத்தும்படி Google வலியுறுத்திய சில காலத்திலேயே இந்தக் பணி நீக்கச் செய்தி வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
Google கிளவுட் பிரிவின் Quantitative User Experience Research Team, Platform and Service Experience Team மற்றும் சில தொடர்புடைய குழுக்களில் பணிபுரிந்தவர்களே இந்த நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ளனர். Google சில வடிவமைப்பு (Design) குழுக்களில் உள்ள ஊழியர்களின் எண்ணிக்கையை பாதியாகக் குறைத்துள்ளது. சில பதவிகள் முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளன. இந்த வேலையிழப்பைச் சந்தித்தவர்களில் பெரும்பாலானோர் அமெரிக்காவைத் தளமாகக் கொண்டவர்கள். பாதிக்கப்பட்டுள்ள சில ஊழியர்களுக்கு புதிய வேலை தேடிக் கொள்ள டிசம்பர் ஆரம்பம் வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. AI உட்கட்டமைப்பை (AI Infrastructure) மேம்படுத்துவதில் Google தீவிரமாகப் பணியாற்றும் வேளையில் இந்தக் கூட்டப் பணி நீக்கம் வந்துள்ளது. எனினும், இந்தக் குறைப்பு குறித்து Google அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக CNBC-யிடம் பதிலளிக்கத் தயாராகவில்லை.
தினசரி வேலைகளில் AI-யை அதிகமாகப் பயன்படுத்துமாறு Google தனது ஊழியர்களை சமீபத்தில் கேட்டுக் கொண்டது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், அமெரிக்காவை மையமாகக் கொண்ட பல பிரிவுகளில் உள்ள ஊழியர்களுக்கு சுயமாகப் பிரிந்து செல்ல Google வாய்ப்பளித்தது. மேலும், சிறிய குழுக்களை மேற்பார்வையிடும் மேலாளர்களில் மூன்றில் ஒரு பகுதியினரை Google நீக்கியிருந்தது. மனிதவளம் (HR), வன்பொருள், தேடல் (Search), விளம்பரங்கள், சந்தைப்படுத்தல், நிதி மற்றும் வர்த்தகப் பிரிவுகள் உட்பட பல அமெரிக்கப் பிரிவுகளுக்கு Google இந்த விருப்பப் பிரிதல் திட்டத்தை வழங்கியது. Google-ஐத் தவிர, மைக்ரோசாஃப்ட், அமேசான், மெட்டா போன்ற பெரிய டெக் நிறுவனங்களும் 2025-ல் ஊழியர்களைப் பணி நீக்கம் செய்துள்ளன. சமீப காலத்தில் டெக் துறையில் அதிக வேலை இழப்புகள் ஏற்பட்ட ஆண்டுகளில் 2025-ம் இடம்பிடித்துள்ளது.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.