
உலகின் மிகப்பெரிய பணக்காரரும், டெஸ்லா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியுமான எலான் மஸ்க், விக்கிபீடியாவுக்கு மாற்றாக 'க்ரோகிபீடியா' (Grokipedia) என்ற புதிய செயற்கை நுண்ணறிவு (AI) தளத்தை தனது xAI நிறுவனம் மூலம் உருவாக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.
இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட மஸ்க், "நாங்கள் xAI மூலம் க்ரோகிபீடியாவை உருவாக்கி வருகிறோம். இது விக்கிபீடியாவை விட மிகப்பெரிய வளர்ச்சி கொண்டதாக இருக்கும். வெளிப்படையாகச் சொல்வதானால், பிரபஞ்சத்தைப் புரிந்துகொள்ள வேண்டும் என்ற xAI-இன் இலக்கை நோக்கிய ஒரு முக்கியமான பணி இது" என்று குறிப்பிட்டுள்ளார்.
இணைய கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவை எலான் மஸ்க் நீண்ட காலமாக விமர்சித்து வருகிறார். அதை இயக்கும் விக்கிமீடியா என்ற இலாப நோக்கற்ற அமைப்பு இடதுசாரி சித்தாந்தச் சார்புடன் செயல்படுவதாக அவர் குற்றம் சாட்டுகிறார்.
அவர் விக்கிபீடியாவை 'வோக்கிபீடியா' (Wokipedia) மற்றும் 'டிக்கிபீடியா' (Dickipedia) என்று விமர்சித்துள்ளார். கடந்த 2023-ஆம் ஆண்டு, விக்கிபீடியாவின் பெயரை 'டிக்கிபீடியா' என்று மாற்றினால், அதற்கு 1 பில்லியன் டாலர் வழங்குவதாகவும் அவர் நகைச்சுவையாகப் பேசினார்.
'க்ரோகிபீடியா' என்ற பெயர், எலான் மஸ்கின் சொந்த செயற்கை நுண்ணறிவுத் தளமான 'Grok'-ல் இருந்து உருவானது. இந்த 'Grok' AI, சமூக ஊடக தளமான 'X'-ல் பயன்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது. தான் குற்றம் சாட்டிய இடதுசாரி சார்பை எதிர்கொள்ள இது உருவாக்கப்பட்டது என்றும், சர்ச்சைக்குரிய விஷயங்களிலும் உண்மையைச் சொல்லும் என்றும், அரசியல் சரித்தன்மைக்குக் கட்டுப்படாது என்றும் மஸ்க் கூறியிருந்தார்.
எக்ஸ் பயனர்களுக்கு பரிந்துரைகளை வழங்கும் அல்காரிதத்தை இயக்கவும் Grok-ஐப் பயன்படுத்த மஸ்க் திட்டமிட்டார். ஆனால், Grok AI, மஸ்க் எதிர்பார்த்தபடி செயல்படவில்லை. எலான் மஸ்க், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் ஆகிய மூவரும் அமெரிக்காவுக்கு அதிகம் தீங்கு விளைவித்தவர்கள் என்று க்ரோக் AI கூறியது சர்ச்சையானது.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.