Free Fire ban: சிறுவனின் திடீர் தற்கொலை.. அந்த கேம் தான் காரணம்?

By Kevin Kaarki  |  First Published Feb 18, 2022, 4:58 PM IST

செண்ட்ரல் மும்பையை சேர்ந்த 14 வயது சிறுவன் ஃபிரீ ஃபயர் கேம் தடை செய்யப்பட்டதால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


செண்ட்ரல் மும்பை பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவன் தற்கொலை செய்து கொண்ட உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. உயிரிழந்த சிறுவன் இந்தியாவில் சமீபத்தில் தடை செய்யப்பட்ட Garena Free Fire கேமிற்கு அடிமையாகி இருந்ததாக கூறப்படுகிறது. பொய்வடா காவல் துறையினர் சிறுவனின் தற்கொலை பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

சிறுவன் விளையாடி வந்த கேமில் ஏதேனும் டாஸ்க் அல்லது சேலன்ஜ் அவனை இந்த முடிவை எடுக்க தூண்டியதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆன்லைன் கேமிங் மோகம் காரணமாக இந்தியாவில் இதுபோன்று ஏராளமான துக்க சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. 

Tap to resize

Latest Videos

உயிரிழந்த சிறுவனின் தந்தை தனியார் நிறுவனம் ஒன்றில் டிசைனராக பணியாற்றி வருகிறார். இவருக்கு சிறுவன் கடந்த ஞாயிற்று கிழமைா இரவு 7.22 மணிக்கு அழைப்பை மேற்கொண்டு இருக்கிறான். எனினும், மனைவியுடன் பயணம் செய்து வந்ததால், தந்தை சிறுவனின் அழைப்பை ஏற்கவில்லை. பின் சிறிது நேரம் கழித்து அவர்கள் மீண்டும் சிறுவனுக்கு அழைபை்பை மேற்கொண்டுள்ளனர். எனினும், சிறுவன் அழைப்பை ஏற்கவில்லை.

வீடு திரும்பிய அவர்கள் சிறுவனின் அறை உல்புறமாக மூடப்பட்டு இருந்ததை கவனித்தனர். பின் சிறுவனின் தந்தை கதவு அருகே இருந்த ஜன்னலை உடைத்து கதவை திறந்துள்ளார். பெரும் போராட்டத்திற்கு பின் சிறுவன் அறையினுள் நுழைந்த பெற்றோர், தங்களது மகன் உயிரிழந்து கிடப்பதை பார்த்து அதிர்ந்து போயினர். பின்  காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சிறுவனின் சடலத்தை உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

"முதற்கட்ட விசாரணையில் சிறுவன் Free Fire ஆன்லைன் கேமிற்கு அடிமையாகி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனினும், சிறுவன் எதனால் இத்தகைய முடிவை எடுத்தான் என்பது பற்றி தெளிவான பதில் இதுவரை கிடைக்கவில்லை. சிறுவன் ஆர்வமுடன் விளையாடி வந்த ஆன்லைன் கேமில் அவனுடன் விளையாடிய நண்பர்களை கண்டறியும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது," என போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

click me!