டுவிட்டர் அலுவலகம் தற்காலிகமாக மூடப்படுவதாகவும், பணியாளர்களுக்கு பணிநீக்கம் செய்யப்பட உள்ளதாகவும் செய்திகள் வந்த நிலையில், பணியாளர்களுக்கு அனுப்பட்டதாக ஒரு மெயில் ஸ்கிரீன்ஷாட் வைரலாகி வருகிறது.
எலான் மஸ்க் டுவிட்டரைக் கைப்பற்றிய பிறகு CEO, CFO உயர் அதிகாரிகளை பணி நீக்கம் செய்தார். மேலும், பல மாற்றங்களை அறிவித்து, அவற்றை உடனே அமல்படுத்தும்படி பணியாளர்களுக்கு காலக்கெடு விதித்தார். இதனிடையே டுவிட்டர் நிறுவனத்தில் பணியாற்றும் பலரை வேலையை விட்டு நீக்க உள்ளதாக தகவல்கள் வந்தன. அதற்கு எலான் மஸ்க் மறுப்பும் தெரிவித்தார்.
இந்த நிலையில், தற்போது பணியாளர்கள் அனைவருக்கும் டுவிட்டர் நிறுவனம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதில், ‘டுவிட்டர் நிறுவனம் ஆரோக்கியமான பாதையில் செல்வதற்காக சில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியதுள்ளது. இந்த முடிவானது டுவிட்டரின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவிய பணியாளர்களையும் ’பாதிக்கலாம்.
இருப்பினும், நிறுவனத்தை வெற்றிப்பாதையில் கொண்டு செல்வதை உறுதிசெய்தவதற்காக, துரதிர்ஷ்டவசமாக இந்த முடிவுகளை எடுக்கிறோம். இதுதொடர்பாக டுவிட்டர் பணியாளர்கள் வெள்ளியன்று மின்னஞ்சல் பெறுவார்கள். அதில் டுவிட்டரில் உங்கள் பணி பொறுப்பு என்ன என்பது குறிப்பிடப்பட்டிருக்கும்.
உங்கள் வேலைக்கு பாதிப்பு இல்லை என்றால், உங்களுடைய பணியிட மின்னஞ்சலில் இந்த அறிவிப்பை பெறுவீர்கள். ஒருவேளை உங்கள் வேலைக்கு பாதிப்பு உள்ளது என்றால், உங்கள் தனிப்பட்ட மின்னஞ்சலில் அறிவிப்பைப் பெறுவீர்கள். மேலும், அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதும் அதில் கொடுக்கப்பட்டிருக்கும். நீங்கள் Twitter HR துறையில் இருந்து எந்த மின்னஞ்சலையும் பெறவில்லை எனில், peoplequestions@twitter.com என்ற முகவரிக்கு இமெயில் அனுப்பவும்.
Twitter நிறுவனத்தில் 4 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்தாரா எலான் மஸ்க்?
ஒவ்வொரு பணியாளரின் பாதுகாப்பை கருதியும், வாடிக்கையாளரின் டேட்டா, டுவிட்டர் கட்டமைப்புகளின் பாதுகாப்பை கருதியும், டுவிட்டர் அலுவலகம் தற்காலிகமாக மூடப்படுகிறது. மேலும், அலுவலகத்திற்குள் நுழைவதற்காக பயன்படுத்தப்படும் அனைவரது பேட்ஜ் ஐடி கார்டும் முடக்கப்படுகிறது. நீங்கள் அலுவலகத்தில் இருந்தாலோ, அலுவலகத்திற்கு வந்துகொண்டிருந்தாலோ வீட்டிற்கு திரும்புங்கள்’. இவ்வாறு அந்த மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The awakening begins for hundreds of Twitter employees as they are being terminated today & all employees have had their office access restricted. https://t.co/dRacWY8z7D pic.twitter.com/XBgN1QMu7M
— TechHelp (@TechHelp)
இந்த இமெயில் ஸ்கிரீன்ஷாட் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இருப்பினும் இதன் உண்மைத்தன்மை குறித்து ஆராய வேண்டியுள்ளது. விரைவில் இதுதொடர்பான முழுமையான விளக்கங்கள் டுவிட்டர் தரப்பில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.