பல்வேறு நிறுவனங்கள் அதிவேக எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மாடல்களை அறிமுகம் செய்யும் பணிகளில் மும்முரம் காட்டி வருகின்றன.
இந்திய எலெக்ட்ரிக் வாகனங்கள் சந்தையில் லோ-ஸ்பீடு (குறைந்த வேகத்தில் செல்லும்) எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. தொடர்ந்து அதிகரித்து வரும் வரவேற்பு காரணமாக நீண்ட ரேன்ஜ் மற்றும் அதிவேக திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மாடல்களுக்கு அதிக தட்டுப்பாடு சூழல் ஏற்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக அதிவேக எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மாடல்களும் விற்பனையில் அசத்தி வருகின்றன.
விற்பனை அதிகரித்து வருவதை அடுத்து, பல்வேறு நிறுவனங்கள் அதிவேக எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மாடல்களை அறிமுகம் செய்யும் பணிகளில் மும்முரம் காட்டி வருகின்றன. அந்த வரிசையில், இந்த ஆண்டு இந்திய சந்தையில் பல்வேறு அசத்தலான எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. அதன் படி இந்திய சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்படும் புதிய எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மாடல்களின் பட்டியலை தொடர்ந்து பார்ப்போம்.
ஹீரோ எலெக்ட்ரிக் AE-47:
ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் இந்திய சந்தையில் முன்னணி எலெக்ட்ரிக் இருசக்கர வாகன உற்பத்தியாளராக விளங்கி வருகிறது. லோ-ஸ்பீடு மற்றும் ஹை-ஸ்பீடு பிரிவுகளில் பல்வேறு மாடல்களை அறிமுகம் செய்து விட்ட நிலையில், ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் தற்போது AE - 47 எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த பைக் 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் காட்சிப்படுத்தப்பட்டது.
இந்த எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளில் 4000 வாட் எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் 3.5 கிலோ வாட் ஹவர் லித்தியம் அயன் பேட்டரி வழங்கப்படுகிறது. இந்த மோட்டார்சைக்கிள் மணிக்கு அதிகபட்சமாக 85 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். மேலும் முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 160 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ் வழங்கும்.
ஹஸ்க்வர்னா இ பைலென்:
பைரெர் மொபிலிட்டி நிறுவனத்தின் ஹஸ்க்வர்னா பிராண்டு புதிதாக எலெக்ட்ரிக் பைக் ஒன்றை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த மாடல் தோற்றத்தில் ஹஸ்க்வர்னா விட்பைலென் போன்றே காட்சி அளிக்கும் என தெரிகிறது. எனினும், இதன் இண்டர்னல் கம்பஷன் என்ஜினுக்கு மாற்றாக எலெக்ட்ரிக் மோட்டார் மற்ரும் பேட்டரி வழங்கப்படுகிறது. இந்த மாடலில் 10 கிலோவாட் திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்படும் என தெரிகிறது. இதன் விலை ரூ. 2 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 3 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம்.
ஈவ் டெசோரோ:
எலெக்ட்ரிக் வாகன ஸ்டார்ட் அப் நிறுவனமான ஈவ் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் மாடல்களை உருவாக்கி வருகிறது. இந்த நிறுவனம் உருவாக்கி வரும் மாடல்களில் ஒன்று தான் டெசோரோ பைக். இந்த மாடல் 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் காட்சிப்படுத்தப்பட்டது. ஈவ் டெசோரபோ மாடல் மணிக்கு அதிகபட்சம் 70 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது. இந்த மாடல் முழு சார்ஜ் செய்தால் 100 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது.