பாலிவுட் நடிகை பிரியண்கா சோப்ரா, தான் பயன்படுத்தி வந்த ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரை விற்றுவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
பாலிவுட் நடிகை பிரியண்கா சோப்ரா தான் ஆசை ஆசையாய் வாங்கி பயன்படுத்தி வந்த ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரை விற்று விட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. தான் பயன்படுத்தி வந்த ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரை பிரியண்கா சோப்ரா பெங்களூரை சேர்ந்த வியாபாரி ஒருவருக்கு விற்று விட்டதாக கூறப்படுகிறது. பிரியண்கா சோப்ரா காரை வாங்கிய வியாபாரி பற்றி எந்த தகவலும் இல்லை. மேலும் கார் எவ்வளவு தொகைக்கு விற்பனை செய்யப்பட்டது என்ற விவரங்களும் மர்மமாகவே உள்ளது.
ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் விலை உயர்ந்த கார்களில் ஒன்றாக கோஸ்ட் மாடல் இருக்கிறது. இந்தியாவில் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் மாடல் விலை குறைந்த பட்சம் ரூ. 5 கோடி ஆகும். இந்தியாவில் பிரியண்கா சோப்ரா பயன்படுத்தி வந்த ரோல்ஸ் ராய்ஸ் கார் சில்வர் மற்றும் பிளாக் என டூயல் டோன் ஃபினிஷ் கொண்டிருந்தது. இந்த காரின் பிரைமரி நிறம் பிளாக் ஆகும். இதன் பொனெட் மற்றும் ரூஃப் உள்ளிட்ட பகுதிகளில் சில்வர் நிறம் பூசப்பட்டு இருக்கிறது.
தற்போது அமெரிக்காவில் வசித்து வருவதால் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் மாடலை இங்கு அதிகம் பயன்படுத்துவதில்லை என்ற காரணத்தாலேயே பிரியண்கா சோப்ரா தனது ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் மாடலை விற்று விட்டதாக கூறப்படுகிறது. ஆடம்பர கார் மாடல்களில் மிகவும் பிரபலமான ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் மாடலில் பிரியண்கா சோப்ரா மற்றும் அவரின் தாயார் மது சோப்ரா பயணிக்கும் புகைப்படங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.
மெக்கானிக்கல் அம்சங்களை பொருத்தவரை ரோல்ஸ் ராய்ஸ் மாடலில் 6.6 லிட்டர் வி12 பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் டுவின் டர்போசார்ஜ் செய்யப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள 6.6 லிட்டர் வி12 என்ஜின் 562 பி.ஹெச்.பி. திறன், அதிகபட்சமாக 780 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த என்ஜினுடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது.
ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் மாடலில் சூசைட் டோர்கள், கதவுகளில் குடை வைத்துக் கொள்ளும் ஹோல்டர், லெதர் இருக்கை கவர்கள், மரத்தால் ஆன ட்ரிம் மற்றும் பல்வேறு இதர ஆடம்பர அம்சங்கள் உள்ளன. இந்த காரின் உள்புற மேற்கூரை வானத்தை இரவு நேரத்தில் பார்ப்பது போன்ற அனுபவத்தை மிகவும் தத்ரூபமாக வழங்கும் வகையில் நேர்த்தியாக உருவாக்கப்பட்டு இருக்கிறது.
ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் தவிர பிரியண்கா சோப்ரா மெர்சிடிஸ் மேபேக் S650, பி.எம்.டபிள்யூ. 5 சீரிஸ், ஆடி கியூ7, மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் கிளாஸ், மெர்சிடிஸ் பென்ஸ் இ கிளாஸ் என ஏராளமான விலை உயர்ந்த ஆடம்பர கார் மாடல்களை பயன்படுத்தி வருகிறார்.