2022 BMW X4 facelift : பி.எம்.டபிள்யூ. X4 ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த மாடல் இரு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட புதிய X4 ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய பி.எம்.டபிள்யூ. X4 ஃபேஸ்லிஃப்ட் மாடல் விலை ரூ. 70.50 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 72.50 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய பி.எம்.டபிள்யூ. X4 ஃபேஸ்லிஃப்ட் மாடல் பெட்ரோல் மற்றும் டீசல் என இருவித என்ஜின் ஆப்ஷ்களில் கிடைக்கிறது.
புதிய X4 ஃபேஸ்லிஃப்ட் மாடலின் உற்பத்தி பணிகள் சென்னையில் இயங்கி வரும் பி.எம்.டபிள்யூ. ஆலையில் நடைபெறுகிறது. இந்த ஆண்டில் மட்டும் பி.எம்.டபிள்யூ. அறிமுகம் செய்து இருக்கும் இரண்டாவது கார் மாடலாக புதிய X4 ஃபேஸ்லிஃப்ட் அமைந்து இருக்கிறது. இந்திய சந்தையில் புதிய பி.எம்.டபிள்யூ. X4 ஃபேஸ்லிஃப்ட் மெர்சிடிஸ் பென்ஸ் GLC கூப் மாடலுக்கு போட்டியாக அமைகிறது.
பி.எம்.டபிள்யூ. X4 ஃபேஸ்லிஃப்ட் மாடலில் முந்தைய வேரியண்ட் உடன் ஒப்பிடும் போது பல்வேறு மாற்றங்களை கொண்டிருக்கிறது. இந்த எஸ்.யு.வி. மாடல் ஏற்கனவே பல்வேறு சர்வதேச சந்தைகளில் அறிமுகம் செய்யப்பட்டுவிட்டது. அந்த வரிசையில் தற்போது இந்த மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. பி.எம்.டபிள்யூ. X4 ஃபேஸ்லிஃப்ட் மாடலில் புது கிரில் ஆல்-பிளாக் மெஷ்-இன்சர்ட்கள் வழங்கப்பட்டு உள்ளன.
2022 பி.எம்.டபிள்யூ. X4 ஃபேஸ்லிஃப்ட் மாடலில் 20 இன்ச் M அலாய் வீல்கள், M ஸ்போர்ட் பிரேக், ரெட் கேலிப்பர்கள் வழஙஅகப்பட்டு உள்ளன. இந்த வீல்கள் புதிய பி.எம்.டபிள்யூ. X4 ஃபேஸ்லிஃப்ட் மாடலுக்கு ஸ்போர்ட் தோற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பி.எம்.டபிள்யூ. X4 ஃபேஸ்லிஃப்ட் மாடல் X-டிரைவ் 30i பெட்ரோல் மற்றும் X-டிரைவ்30d டீசல் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
இதன் டீசல் என்ஜின் 265 ஹெச்.பி. திறன், 620 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த கார் மணிக்கு 0 முதல் 100 வேகத்தை வெறும் 5.8 நொடிகளில் எட்டிவிடுகிறது. இதன் 2 லிட்டர், 4 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் 252 ஹெச்.பி. திறன் மற்றும் 350 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 6.6 நொடிகளில் எட்டிவிடும்.