மொபைல் சாதனங்கள் மற்றும் மெசேஜிங் தொடர்பான காப்புரிமைகளை விற்பனை செய்யும் பிளாக்பெரி.
பிளாக்பெரி நிறுவனம் மொபைல் சாதனங்கள், மெசேஜிங் மற்றும் வயர்லெஸ் நெட்வொர்க்கிங் சார்ந்த சட்டப்பூர்வ காப்புரிமைகள் அனைத்தையும் விற்பனை செய்யப் போவதாக அறிவித்து உள்ளது. இவை அனைத்தையும் 600 மில்லியன் டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 4,490 கோடிக்கு விற்பனை செய்ய பிளாக்பெரி முடிவு செய்துள்ளது.
பிளாக்பெரி நிறுவன காப்புரிமைகளை Catapult IP Innovations எனும் நிறுவனம் வாங்குகிறது. இது பிளாக்பெரி காப்புரிமைகளை பெறுவதற்காகவே உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த விற்பனை பிளாக்பெரி சாதனங்கள் மற்றும் சேவைகளை எந்த விதத்திலும் பாதிக்காது என பிளாக்பெரி தெரிவித்துள்ளது.
பிளாக்பெரியின் தற்போதைய வியாபார பணிகளுக்கு அவசியமான காப்புரிமைகள் எதுவும் இந்த விற்பனையில் சேர்க்கப்படவில்லை. விற்பனை செய்யப்படும் காப்புரிமைகளுக்கான உரிமத்தை பிளாக்பெரி பெற்றுக் கொள்ளும். விற்பனை நிறைவில் பிளாக்பெரி நிறுவனத்திற்கு 450 மில்லியன் டாலர்கள் ரொக்கமாகவும், 150 மில்லியன் டாலர்கள் சட்டப்பூர்வ பத்திரங்கள் வடிவிலும் வழங்கப்படும்.
பத்திரங்களுக்கான தொகை ஐந்து சரிசம தவணைகளில் வழங்கப்படும். ஜனவரி மாத துவக்கத்தில் பிளாக்பெரி தனது சேவைகள் அனைத்தையும் நிறுத்தியது. மொபைல் டேட்டா, அழைப்புகள், குறுந்தகவல்கள் மற்றும் 9-1-1 போன்ற சேவைகள் அனைத்தும் முழுமையாக நிறுத்தப்பட்டன.