ஏர்டெல் நிறுவனம் ப்ரீபெய்டு பயனர்களுக்கான குறைந்தபட்ச மாதாந்திர ரீசார்ஜ் பேக்கின் விலையை உயர்த்தியுள்ளது. இதுகுறித்த முழுமையான விவரங்களை இங்குக் காணலாம்.
ஏர்டெல் நிறுவனம் அதன் குறைந்தபட்ச மாதாந்திர ரீசார்ஜ் விலையை ரூ.99ல் இருந்து ரூ.155 ஆக உயர்த்தியுள்ளது. அதாவது, குறைந்தபட்ச ரீசார்ஜ் கட்டணம் 155 ரூபாய் ஆகும். கிட்டத்தட்ட 57 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டணம் ஹரியானா மற்றும் ஒடிசாவில் மட்டுமே அமல்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் இந்தியா முழுவதும் கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு முன்பு வழங்கப்பட்ட குறைந்தபட்ச திட்டத்தில், அதாவது 99 ரூபாய் ப்ரீபெய்ட் திட்டத்தில் 200MB டேட்டா மற்றும் வினாடிக்கு 2.5 பைசா என்ற விகிதத்தில், 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்பட்டது. புதிய 155 ரூபாய் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில் சற்று கூடுதல் அம்சங்கள் வழங்கப்படுகிறது.
அதன்படி, 155 ரீசார்ஜ் திட்டத்தில் அன்லிமிடேட் கால், 1 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. கூடுதலாக, ரீசார்ஜ் பேக், Wynk Music மற்றும் Hellotunes போன்ற சேவைகள் வழங்கப்படுகிறது. இதன் வேலிடிட்டி 24 நாட்கள் ஆகும். இதற்கு முன்பு 99 ரூபாய் திட்டத்தில் 28 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்பட்டது. ஆனால், தற்போது 4 நாட்கள் குறைக்கப்பட்டுள்ளது.
Airtel வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி! மலிவு விலையில் புதிய பிளான் அறிமுகம்!!
மேலும், 155க்கு கீழ் உள்ள அழைப்புகள், எஸ்எம்எஸ் மற்றும் டேட்டா எதுவாக இருந்தாலும், அனைத்து 28 நாள் வேலிடிட்டி உள்ள திட்டங்களை நிறுத்த உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. ஏர்டெல் புதிய கட்டண மாற்றம் ஜனவரி மாதத்தில் இருந்து அமலுக்கு வரலாம், இதுதொடர்பான முழுமையான விவரங்கள் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏர்டெல்லைப் பொறுத்தவரையில் தற்சமயம் 5ஜி சேவையை கொண்டு வருவதில் முனைப்பாக உள்ளது. டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், சிலிகுரி, குவாஹாத்தி, பானிபட், புனே, நாக்பூர், வாரணாசி மற்றும் குருகிராம் ஆகிய நகரங்களில் 5ஜி சேவைகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
5ஜி சேவைக்கான ரீசார்ஜ் திட்டங்கள் என்று வரும் போது, விலையேற்றம் இன்னும் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இருப்பினும், இதுவரையில், 5ஜி ரீசார்ஜ் திட்டங்கள் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. பயனர்கள் 4ஜி சேவை கட்டணத்திலேயே 5ஜி சேவையை அனுபவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.