இந்திய சந்தையில் பிகாஸ் D15 மாடல் D15i மற்றும் D15 ப்ரோ என இரண்டு வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
பிகாஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட D15 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய பிகாஸ் D15 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலின் விலை ரூ. 99 ஆயிரத்து 999 என துவங்குகிறது. புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய எலெக்ட்ரிக் வாகனங்கள் சந்தையில் பிரீமியம் மாடல்கள் பிரிவில் களமிறங்கி இருக்கிறது. புதிய பிகாஸ் D15 மாடலின் வினியோகம் விரைவில் தொடங்க இருக்கிறது.
ஆர்.ஆர். குளோபல் எனும் முன்னணி எலெக்ட்ரிக் நிறுவனத்தின் அங்கமாக பிகாஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. ஆர்.ஆர். குளோபல் நிறுவனம் மூன்று தலைமுறைகளாக எலெக்ட்ரிக் துறையில் அனுபவம் கொண்டு இருக்கிறது. அந்த வகையில் பிகாஸ் எலெக்ட்ரிக் வாகனங்கள் அதிர தரமுள்ளதாக உருவாக்கப்பட்டு இருக்கிறது.
பிரீமியம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்:
நகரம் மற்றும் வளர்ந்து வரும் பகுதிகளில் மாறி வரும் வாழ்க்கை முறையை கருத்தில் கொண்டு சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் புது தீர்வுகளை வழங்கும் நோக்கில், பிகாஸ் பிரீமியம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்கள் உருவாக்கப்பட்டு இருக்கின்றன. ஏற்கனவே பிகாஸ் B8 மற்றும் A2 போன்ற மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது மூன்றாவது மாடலாக பிகாஸ் D15 அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
இந்திய சந்தையில் பிகாஸ் D15 மாடல் D15i மற்றும் D15 ப்ரோ என இரண்டு வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இவற்றின் விலை முறையே ரூ. 99 ஆயிரத்து 999 என்றும் ரூ. 1 லட்சத்து 14 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளன. தலைசிறந்த டிசைன் மற்றும் ஏராளமான புது அம்சங்களுடன் பிகாஸ் D15 சீரிஸ் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
பேட்டரி மற்றும் ரேன்ஜ் விவரங்கள்:
புதிய பிகாஸ் D15 மாடலில் 3.2 கிலோவாட் ஹவர் லித்தியம் அயன் பேட்டரி வழங்கப்பட்டு உள்ளது. மேலும் இது IP67 தர சான்று பெற்று இருக்கிறது. இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய 5 மணி 30 நிமிடங்கள் ஆகும். மேலும் இந்த பேட்டரியை எளிதில் கழற்ற முடியும் என்பதால், வழக்கமான 6A சாக்கெட் கொண்டு எங்கு வேண்டுமானாலும் சார்ஜ் ஏற்றிக் கொள்ளலாம். மெட்டல் பாடி கொண்டிருக்கும் பிகாஸ் D15 அதிக உறுதி மற்றும் தரம் கொண்டுள்ளது.
இதில் உள்ள IP67 தர மோட்டார்கள் ஸ்கூட்டரை மணிக்கு 0 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் செல்ல வெறும் 7 நொடிகளையே எடுத்துக் கொள்கிறது. இந்த ஸ்கூட்டரில் ஸ்போர்ட்ஸ் மோட் மட்டும் இன்றி இகோ மோட் மற்றும் ரிவர்ஸ் மோட் உள்ளிட்டவை இடம்பெற்று இறுக்கிறது. இந்த ஸ்கூட்டரை முழு சார்ஜ் செய்தால் 115 கிலோமீட்டர் வரை செல்ல முடியும்.