ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 14 ப்ரோ மாடலில் வழங்கப்பட இருக்கும் ரேம் அளவு குறித்து இணையத்தில் புதிய தகவல் வெளியாகி உள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 14 சீரிஸ் மாடல்கள் வெளியீட்டுக்கு இன்னும் ஆறு மாதங்கள் உள்ளன. எனினும், புதிய ஐபோன் சீரிஸ் விவரங்கள் இணையத்தில் வெளியாக துவங்கி விட்டன. அந்த வரிசையில் தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின்படி ஐபோன் 14 ப்ரோ மாடல்களில் அதிகபட்சம் 8GB ரேம் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இது உண்மையாகும் பட்சத்தில் அதிகளவு ரேம் கொண்டு வெளியாகும் முதல் ஐபோன் மாடலாக ஐபோன் 14 ப்ரோ இருக்கும்.
புதிய தகவல் கொரிய நாட்டு வலைதளம் ஒன்றில் இடம்பெற்று இருக்கிறது. இந்த தகவல் ஆப்பிள் நிறுவனத்திற்கு உதிரிபாகங்கள் வினியோகம் செய்யும் நிறுவனங்கள் தரப்பில் இருந்து கிடைத்ததாக அந்த வலைதளத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது. மேலும் புதிய ஐபோன் சீரிசுக்கான உற்பத்தியை துவங்குவதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே 2019 முதல் சாம்சங் அறிமுகம் செய்து வரும் கேலக்ஸி எஸ் சீரிஸ் ஃபிளாக்ஷிப் மாடல்களில் 8GB ரேம் வழங்கப்பட்டு வருகிறது. இதேபோன்று இணையத்தில் வெளியாகி இருக்கும் மற்றொரு தகவலில் ஹைடாங் இண்டர்நேஷனல் செக்யூரிடீஸ் வல்லுனர் ஜெஃப் பு ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் மாடால்களில் முறையே 6.1 இன்ச் மற்றும் 6.7 இன்ச் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது.
இரு ப்ரோ மாடல்களில் 8GB ரேம் வழங்கப்படும் என அவர் தெரிவித்து இருக்கிறார். முன்னதாக ஆப்பிள் நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த ஐபோன் 13 ப்ரோ மற்றும் அதற்கு முந்தைய ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் 12 ப்ரோ போன்ற மாடல்களில் அதிகபட்சமாக 6GB ரேம் மட்டுமே வழங்கப்பட்டு இருந்தது. ப்ரோ மாடல்களை தவிர இதர மாடல்களில் குறைந்த அளவு ரேம் வழங்கப்படுகின்றன.
இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் ப்ரோ மாடல்களில் பன்ச் ஹோல் ரக டிஸ்ப்ளே, LTPO TFT ரக OLED பேனல்கள் வழங்கப்பட இருக்கின்றன. இத்துடன் அதிகபட்சம் 120Hz வேரியபில் ரிப்ரெஷ் ரேட் கொண்ட சாம்சங் டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது. மேலும் புதிய ஐபோன் 14 சீரிஸ் மாடல்களில் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.