பிரதமர் மோடி குஜராத் சுற்றுப்பயணத்தின் போது பயன்படுத்திய வாகனம் பற்றி ஆனந்த் மஹிந்திரா கருத்து பதிவிட்டுள்ளார்.
பிரதமர் மோடி இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தனது சொந்த மாநிலமான குஜராத்திற்கு சென்று இருந்தார். அங்கு பூக்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் சாலையில் ஊர்வலமாக சென்றார். சாலையோரம் குவிந்து இருந்த பாா.ஜ.க. தொண்டர்களை நோக்கி, வாகனத்தில் இருந்தபடி கை அசைத்தும், வெற்றிச்சின்னத்தை காட்டியவாறு பயணம் செய்தார்.
பிரதமர் மோடியை வரவேற்க சாலையோரங்களில் பதாகைகள் இடம்பெற்று இருந்தது. மேலும் அங்கு குவிந்திருந்த தொண்டர்கள் மலர்தூவி பிரதமர் மோடியை வரவேற்றனர். பிரதமர் மோடி வருகையை ஒட்டி அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. பிரதமர் மோடி ஊர்வலமாக சென்ற வாகனம் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய தலைமுறை மஹிந்திரா தார் மாடல் ஆகும்.
இது மஹிந்திரா குழும தலைவர் ஆனந்த் மஹிந்திராவுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பிரதமரின் ஊர்வல வீடியோக்களை பார்த்து மகிழ்ச்சியடைந்த ஆனந்த் மஹிந்திரா, ஊர்வலத்திற்கு மேட்-இன்-இந்தியா வாகனத்தை பயன்படுத்திய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தார். இதுகுறித்து ஆனந்ந் மஹிந்திரா தனது டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
धन्यवाद प्रधान मंत्री जी विजय परेड के लिए भारत में निर्मित वाहन से बेहतर कुछ नहीं है ! 😊 https://t.co/9KWrypK9m8
— anand mahindra (@anandmahindra)
அதில், "நன்றி பிரதமர் மோடி ஜி வெற்றி ஊர்வலத்திற்கு மேட் இன் இந்தியா வாகனம் தவிர வேறு எதுவும் சிறப்பாக அமைந்திருக்காது!" என ஆனந்த் மஹிந்திரா குறிப்பிட்டு இருந்தார்.
இந்தியாவில் மஹிந்திரா தார் மாடல் ஹார்டு-டாப் வெர்ஷன் மற்றும் கன்வெர்டிபில் சாஃப்ட் டாப் வெர்ஷன் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. எனினும், பிரதமர் மோடி ஊர்வலத்திற்கு பயன்படுத்திய மா டல் சாஃப்ட் டாப் வெர்ஷன் ஆகும். இந்த கார் கேலக்ஸி கிரே நிறம் கொண்டிருக்கிறது. ஆனால் இது அட்வென்ச்சர் சார்ந்த AX வேரியண்டா அல்லது லைஃப்ஸ்டைல் சார்ந்த LX வேரியண்டா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யும் வேரியண்டிற்கு ஏற்ப மஹிந்திரா தார் மாடல் எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், அலாய் வீல்கள், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், முன்புறம் பார்க்கும் படியான ரியர் சீட்கள், ISOFIX மவுண்ட்கள், தொடுதிரை வசதி கொண்ட டிஸ்ப்ளே, ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ போன்ற அம்சங்கள் வழங்கப்படுகின்றன.
புதிய தார் மாடல் 2.0 லிட்டர் எம் ஸ்டேலியன் பெட்ரோல் அல்லது 2.2 லிட்டர் எம்ஹாக் டீசல் என்ஜின் என இருவித ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இருவித என்ஜின்களுடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இத்துடன் 4x4 அனைத்து மாடல்களிலும் வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்தியாவில் புதிய மஹிந்திரா தார் எஸ்.யு.வி. மாடலின் விலை ரூ. 12.79 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 15.09 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.