
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், பழைய பென்ஷன் முறையை வலியுறுத்தியும், ஊதிய உயர்வு உள்ளிட்டவை குறித்து கடந்த சில தினங்களாக தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் சேகர் என்பவர், ஜாக்டோ ஜியோ அமைப்பின் போராட்டம் நடைபெற்றால் போக்குவரத்து மருத்துவம், கல்வி உள்ளிட்டவை ஸ்தம்பித்து விடும் என்றும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு போட்டார்.
அது தொடர்பான வழக்கு விசாரணை இன்று நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உடனடியாக வேலைக்கு திரும்ப வேண்டும் என்று அறிவுறுத்தினர். மேலும் நிபந்தனைகளை முன் வைக்காமல் ஊழியர்கள் பணிக்கு திரும்பினால் வரும் தலைமைச் செயலரை நீதிமன்றத்துக்கே அழைத்து பேச்சுவார்த்தைக்கு உத்தரவிட தயார் என்றும் நீதிமன்றம் கூறியது.
மேலும், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் ஒரு மணி நேரத்தில் போராட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்றும் வேலை நிறுத்தத்தை வாபஸ் பெறாவிட்டால் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்துமாறு உத்தரவிட நேரிடும் என்றும் நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கை நியாயமானது என்றும் ஆனால் போராட்டம் நடத்துவதை ஏற்க முடியாது என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். ஒரு மணி நேரத்தில் போராட்டத்தை ஒத்தி வைப்பது குறித்து ஜாக்டோ ஜியோ அமைப்பு தெரிவிக்குமாறு கூறி வழக்கை ஒத்தி வைத்தனர்.