
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் எவ்வித நிபந்தனையும் இன்றி உடனடியாக வேலைக்கு திரும்ப வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தி உள்ளது.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், பழைய பென்ஷமுறையை வலியுறுத்தியும், ஊதிய உயர்வு உள்ளிட்டவை குறித்து கடந்த சில தினங்களாக தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் சேகர் என்பவர், ஜாக்டோ ஜியோ அமைப்பின் போராட்டம் நடைபெற்றால் போக்குவரத்து மருத்துவம், கல்வி உள்ளிட்டவை ஸ்தம்பித்து விடும் என்றும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு போட்டார்.
அது தொடர்பான வழக்கு விசாரணை இன்று நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உடனடியாக வேலைக்கு திரும்ப வேண்டும் என்று அறிவுறுத்தினர்.
எந்தவித நிபந்தனையும் முன் வைக்காமல் ஊழியர்கள் பணிக்கு திரும்பினால் வரும் திங்கட்கிழமை அன்று தமிழக முதன்மை செயலரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.
தற்போது பள்ளிகளில் காலாண்டு தேர்வு நடைபெற உள்ளது. இதனை ஆசிரியர்கள் கருத்தில் கொண்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர். போராட்டத்தை வாபஸ் பெற்றால்தான் பேச்சுவார்த்தை என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தி உள்ளது.