
ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் என்னை விசாரிக்காமல், எனது மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு தொல்லை கொடுப்பது ஏன் என முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஏர்செல் நிறுவனப் பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்குமாறு அப்போதைய மத்திய தகவல் மற்றும் தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்த தயாநிதிமாறன் நெருக்கடிக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக ஏர்செல் நிறுவனத் தலைவர் சிவசங்கரன் அளித்த புகாரின் பேரில் சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்த வழக்கு தொடர்பாக டெல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் சி.பி.ஐ. சார்பில் கடந்த 2014-ஆம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில், மேக்சிஸின் துணை நிறுவனமான குளோபல் கம்யூனிகேஷன் லிமிடெட், ஏர்செல் நிறுவனத்தில் ரூ.5000 கோடியை முதலீடு செய்ய அனுமதி கோரியிருந்ததாகவும், அதற்கு அப்போதைய நிதியமைச்சர் ப.சிதம்பரம் சட்ட விரோதமாக அனுமதி அளித்ததாகவும் கூறப்பட்டிருந்தது.
இந்த விவகாரம் தொடர்பாக ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தை, வியாழக்கிழமை ஆஜராகும்படி சி.பி.ஐ. சம்மன் அனுப்பி இருந்தது.
இந்த நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம், அந்நிய நேரடி முதலீட்டு வாரியத்தின் பரிந்துரையை ஏற்று, ஒப்பந்தத்திற்கு அனுமதி அளித்தது நான்தான். அப்படி இருக்கையில் இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரத்தை விசாரிப்பது ஏன் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். ஏர்செல் - மேக்சிஸ் விவகாரத்தில் சிபிஐ தவறான தகவல்களை பரப்புவது வருத்தம் அளிப்பதாகவும் ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.