
நாகப்பட்டினம்
நாகப்பட்டினம் மாவட்ட விவசாயிகளுக்கு செப்டம்பர் 18-ஆம் தேதிக்குள் பயிர்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகையை வழங்காவிட்டால், செப்டம்பர் 19-ஆம் தேதி மாவட்ட அளவில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் மற்றும் அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் தெரிவித்துள்ளது.
தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் மற்றும் அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழுவின் அவசரக் கூட்டம் நாகப்பட்டினத்தில் நேற்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழு மாநிலப் பொருளாளர் எஸ்.ஸ்ரீதர் தலைமைத் தாங்கினார். தமிழக காவிரி விவசாயிகள் சங்கச் செயலாளர் எஸ்.ராமதாஸ் முன்னிலை வகித்தார்.
இந்தக் கூட்டத்தில், “100 சதவீதம் வறட்சி பாதிப்பு என தமிழக அரசு அறிவித்து உள்ளதைக் கருத்தில் கொண்டு, பயிர்க் காப்பீடு நிறுவனம், நாகப்பட்டினம் மாவட்டத்தின் அனைத்துப் பகுதி விவசாயிகளுக்கும் பாகுபாடின்றி 100 சதவீத இழப்பீடு வழங்க வலியுறுத்துவது.
விவசாயப் பிரதிநிதிகளின் ஆலோசனையின்றி, காவிரி புஷ்கரத்திற்காக மேட்டூரிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டதை கண்டிப்பது.
செப்டம்பர் 18-ஆம் தேதிக்குள், பயிர்க் காப்பீட்டு நிறுவனம் நாகப்பட்டினம் மாவட்ட பகுதிகளைச் சேர்ந்த அனைத்து விவசாயிகளுக்கும் 100 சதவீத காப்பீடு இழப்பீட்டை வழங்காவிட்டால், செப்டம்பர் 19-ஆம் தேதி மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் சாலை மறியல் போராட்டம் நடத்துவது” போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், சங்கங்களின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.