நீதிமன்றத்திற்கு பொய்யான தகவல் அளித்த திண்டுக்கல் ஆட்சியர்; நேரில் ஆஜராகுமாறு மதுரை நீதிபதிகள் அதிரடி உத்தரவு…

First Published Sep 15, 2017, 8:56 AM IST
Highlights
Dindigul Collector who provided false information to the court Madurai court orders to appear in person


மதுரை

நீர் நிலைகளில் இருந்த கல்குவாரி கழிவுகளை அகற்றிவிட்டதாக நீதிமன்றத்திற்கு பொய்யான தகவல் அளித்த திண்டுக்கல் ஆட்சியரை நேரில் ஆஜராகுமாறு மதுரை நீதிபதிகள் அதிரடி உத்தரவிட்டுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள புளியம்பட்டி இ.சித்தூர் பகுதி நீர் நிலைகளை பாதுகாக்கவும், கல் குவாரிக்கான உரிமத்தை ரத்து செய்யவும் கோரி மனு ஒன்று மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

இதுகுறித்து வழக்கறிஞர் ஆணையர் வழக்குத் தொடர்பான ஆய்வு அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

அந்த அறிக்கையில் “கல் குவாரியால் நீர் நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது” என்பது உறுதி செய்யப்பட்டிருந்தது.

ஆனால், திண்டுக்கல் ஆட்சியர் சார்பில் உயர் நீதிமன்றத்தில் ஏற்கெனவே தாக்கல் செய்த அறிக்கையில் “கல்குவாரி கழிவுகள் நீர் நிலைகளிலிருந்து அகற்றப்பட்டுவிட்டது” என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதனையடுத்து நீதிபதிகள், உயர் நீதிமன்றத்திற்குத் தவறான தகவல் அளித்ததால் திண்டுக்கல் ஆட்சியர் மற்றும் திண்டுக்கல் மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குநர் ஆகியோர் செப்டம்பர் 18-ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தனர்.

 

click me!