
மதுரை
மதுரையில் மட்டும் 90 ஆயிரத்து 91 மின்னணு குடும்ப அட்டைகள் வாங்குவதற்கு ஆளில்லாமல் ரேசன் கடைகளிலேயே தேக்கமடைந்துள்ளன. தங்களின் மின்னணு குடும்ப அட்டையில் காஜல் அகர்வால் புகைப்படம் வந்தால் யார் தான் வாங்குவாங்க…
மதுரை மாவட்டத்தில் 90 ஆயிரத்து 91 மின்னணு குடும்ப அட்டைகள், குடும்ப அட்டைதாரர்களால் பெறப்படாமல் நியாய விலைக் கடைகளிலேயே தேங்கியுள்ளன.
இந்த நிலையில், மின்னணு அட்டையை வாங்காதவர்களுக்கு பொது விநியோகத் திட்ட பொருள்களை வழங்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
மதுரை மாவட்டத்தில் 8 இலட்சத்து 69 ஆயிரத்து 269 குடும்ப அட்டைகள் புழக்கத்தில் உள்ளன. பழைய குடும்ப அட்டைகளுக்குப் பதிலாக கடந்த ஏப்ரல் 1 முதல் மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
பல்வேறு கட்டங்களாக இதுவரை 6 இலட்சத்து 74 ஆயிரத்து 73 மின்னணு அட்டைகள் அச்சிடப்பட்டு நியாய விலைக் கடைகளுக்கு வழங்கப்பட்டு உள்ளன. இவற்றில் இதுவரை 5 இலட்சத்து 83 ஆயிரத்து 982 மின்னணு குடும்ப அட்டைகள் சம்பந்தப்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மீதமுள்ளா 90 ஆயிரத்து 91 மின்னணு அட்டைகள் நியாய விலைக் கடைகளிலேயே குடும்ப அட்டைதாரர்களால் பெறப்படாமல் இருக்கிறது.
குடும்ப அட்டைதாரர்களின் பெயர், முகவரி, தெளிவில்லாத புகைப்படம் உள்ளிட்ட காரணங்களால் பலருக்கு மின்னணு குடும்ப அட்டைகள் அச்சிடுவதில் தாமதமும் ஏற்பட்டுள்ளது.
இந்த விவரங்கள் மீண்டும் பெறப்பட்டு மின்னணு அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி, இன்னும் ஒரு இலட்சத்து 95 ஆயிரத்து 196 பேருக்கு மின்னணு அட்டை அச்சிட வேண்டி உள்ளது.
இதுவரை மின்னணு அட்டை கிடைக்கப் பெறாதவர்கள் உடனடியாக தங்களது நியாய விலைக் கடைகளை அணுகி மின்னணு அட்டை வந்துள்ளதா? என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
அவ்வாறு இல்லாதவர்கள் தங்களது பெயர், முகவரி, பிறந்ததேதி ஆகியவற்றுக்கான ஆவணங்களை நியாய விலைக் கடைகளிலேயே சமர்ப்பிக்கலாம்.
அச்சிடப்பட்ட மின்னணு அட்டைகளை குடும்ப அட்டைதாரர்கள் வாங்கிச் செல்லாத நிலை இருப்பதால், மின்னணு அட்டை இருப்பவர்களுக்கு மட்டுமே பொதுவிநியோகத் திட்ட பொருள்கள் வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.