ஏற்காடு கோடை விழா மலர்க் கண்காட்சி.. நாளை மறுநாள் நிறைவு.. படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்..

By Thanalakshmi VFirst Published May 30, 2022, 12:16 PM IST
Highlights

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் மலர்கண்காட்சி நாளை மறுநாள் நிறைவடைவதால் இன்னும் இரு தினங்களுக்கு சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் 45-வது கோடை விழா மலர்க் கண்காட்சி கடந்த 25-ம் தேதி தொடங்கியது. 5 லட்சம் மலர்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள மலர் சிற்பங்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளன. கோடை விழாவை காண உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள் மற்றும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் மக்கள் படையெடுத்த வண்ணம் உள்ளனர்.

இதனை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் , ஏற்காட்டுக்கு செல்லும் வாகனங்கள் சேலம் - அடிவாரம் மலைப்பாதை வழியாக செல்லும் வகையிலும் அங்கிருந்து திரும்பும் வாகனங்கள் ஏற்காடு - குப்பனூர் சாலை வழியாக செல்லும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த இரண்டு பாதைகளும் ஒரு வழிப்பாதையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று ஞாயிறுக்கிழமை என்பதால் காலை முதலே ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்தவாறு இருந்தது. இருசக்கர வாகனம், வேன்கள், கார்கள் உள்ளிட்ட வாகனங்களில் பயணிகள் வந்திருந்தால் போக்குவரத்து நெரிசல் மிகுதியாக காணப்பட்டது. 

ஏற்காடு அண்ணா பூங்காவில் அமைக்கப்பட்டிருந்த மலர்க் கண்காட்சியை காண குவிந்த சுற்றுலாப் பயணிகள் கூட்டத்தினால் ஏற்காடு பேருந்து நிலையம், அண்ணா பூங்காவையொட்டிய ரவுண்டானா, ரோஜாத்தோட்டம் செல்லும் சாலை, கரடியூர் காட்சிமுனை பகுதிக்குச் செல்லும் சாலை என பொழுதுபோக்கு இடங்களுக்கு செல்லக்கூடிய அனைத்துச் சாலைகளிலும் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் நெரிசல் ஏற்பட்டது.  படகு இல்லத்திலும் கூட்டம் அலைமோதியது.இந்நிலையில் நாளை மறுநாள் கோடை விழா நிறைவடைய உள்ளதால், இன்று முதல் 1-ம் தேதி வரை ஏற்காட்டுக்கு பயணிகள் வருகை அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

click me!