
லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள துணை வேந்தர் கணபதி, சிறையில் சுடிநீர் கூட கொடுக்க மறுக்கிறார்கள் என்று நீதிபதியிடம் முறையிட்டுள்ளார். மனசாட்சியோடு எழுதுங்கள் என்றும் மீடியாக்களைப் பார்த்து ஆவேசமாக கூறியுள்ளார்.
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் துணை வேந்தராக பணியாற்றிய கணபதி, அங்கு வேதியியல் துறை உதவி பேராசிரியராக பணியாற்றி வரும் சுரேஷ் என்பவரிடம் 30 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கியபோது ஊழல் தடுப்பு காவல் துறையினரால் கையும், களவுமாக பிடிபட்டார்.
கணபதியுடன், வேதியியல் துறை பேராசிரியர் என்.தர்மராஜூம் கைது செய்யப்பட்டார். தனது தகுதிகாண் பருவத்தை நிறைவு செய்வதற்காகத் துணைவேந்தர் ரூ.30 லட்சம் கேட்பதாக டி.சுரேஷ் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
தங்களுக்கு ஜாமீன் வழங்கக் கோரி துணைவேந்தர் கணபதி, பேராசிரியர் தர்மராஜ் ஆகியோர் கோவை சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். நீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்தது. இந்த நிலையில் லஞ்சப் புகாரில் கைது செய்யப்பட்ட பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதியை பணியிடை நீக்கம் செய்து, தமிழக ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான பன்வாரிலால் புரோகித் உத்தரவிட்டிருந்தார்.
துணைவேந்தர் கணபதியை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க கோவை ஊழல் வழக்குகள் சிறப்பு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார், மனு ஒன்றை நேற்று தாக்கல் செய்திருந்தனர். அந்த இன்று இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. ஊழல் தடுப்பு சட்ட வழக்குகள், நீதிமன்ற நீதிபதி ஜான்மினோ, விடுப்பில் உள்ளதால், வழக்கை தலைமைக் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி மதுரசேகர் விசாரித்தார்.
முன்னதாக நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்ட துணைவேந்தர் கணபதி, நீதிமன்ற நுழைவுவாயிலில் நின்றிருந்த செய்தியாளர்களைப் பார்த்து, மனசாட்சியோடு எழுதுங்கள். நானும் மனுஷன்தான். உங்களுக்கும் பிள்ளைக்குட்டிகள் இருக்கும். மறந்துடாதீங்க. எதை வேண்டுமானாலும் எழுதலாம் என்று எழுதாதீர்கள் என்று கோபம் கொப்பளிக்கும்படி கூறிச் சென்றார். இதனைத் தொடர்ந்து கணபதியை போலீசார் நீதிமன்றத்துக்குள் அழைத்து
சென்றனர்.
விசாரணையின்போது நீதிபதி, கணபதியிடம், உங்களை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க போலீசார் மனு தாக்கல் செய்திருக்கிறார்கள் என்று சொல்ல, கணபதி தெரியும் என்பதுபோல தலையாட்டினார். பின்னர் கணபதி, மீடியா பொய்யான தகவல்களை எழுதி பூதாகரமாக்கிவிட்டார்கள். நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். எனக்கு சிறைக்குள் ஏகப்பட்ட கெடுபிடிகள் கொடுக்கிறார்கள். சுடுநீர் கூட கொடுக்க மறுக்கிறார்கள். நான் சீனியர் சிட்டிசன். சிறைக் கைதிகளுக்கு கிடைக்க வேண்டிய அடிப்படை வசதிகள்கூட எனக்கு கிடைக்கவில்லை என்று நீதிபதியிடம் முறையிட்டார்.
இதனைக் கேட்ட நீதிபதி, உங்களுக்கு சுடுநீர் கொடுப்பதற்கு ஆவண செய்கிறேன். மற்ற விஷயங்களை, உங்கள் வழக்கை விசாரிக்கும் ஊழல் தடுப்பு சட்ட வழக்குகள் நீதிமன்ற நீதிபதி ஜான்மினோ அவர்களிடம் முறையிடுங்கள் என்றார். மேலும், கணபதியை காவலில் எடுத்து விசாரிக்கும் மனு மீதான விசாரணையை வரும் 12 ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
‘
இதன் பின்னர், நீதிமன்ற வளாகத்தில் உள்ள பெஞ்சில் கணபதி அமரவைக்கப்பட்டார். அப்போது இறுகிய முகத்துடன் இருந்த கணபதியிடம், அவரது மகன், அப்பா... நீங்க எதுக்கும் கலங்காதீங்க...! வீட்டை நான் பாத்துக்குறேன். நீங்க எதுக்கும் கலாங்காதீங்க... தைரியமா இருங்க என்று கூறிவிட்டு சென்றார். வேனில் ஏற்ற அழைத்துவரப்பட்ட கணபதி, மீண்டும் செய்தியாளர்களைப் பார்த்து, நான் மீண்டும் வருவேன். மனசாட்சியோடு எழுதுங்கள்
என்று ஆவசமாக கூறியபடியே போலீஸ் வேனில் ஏறினார்.